இந்தியா முழுவதும் பிரதமர் மோடி வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் விரட்டப்பட்டதாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். 

வேலூரில் மக்களவை தேர்தலையொட்டி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோடையாஞ்சி, அழிஞ்சிகுளம், சங்கராபுரம் ஆகிய பகுதியில் வீடு வீடாக நடந்து சென்று உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

 

அப்போது, உதயநிதி ஸ்டாலினுக்கு, கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். மேலும், இளைஞர்கள் அவருடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது அவர் கூறுகையில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தில் முதலிடத்தில் கதிர்ஆனந்தின் பெயரும் உதயசூரியன் சின்னமும் இருக்கிறது. அது போல் வாக்கு எண்ணிக்கையின் போது அவருடைய பெயரும் நம் இயக்கத்தின் சின்னமும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

 

இன்னும் 2 அல்லது 6 மாதங்களிலோ சட்டப்பேரவை தேர்தல் வரும். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க ஒட்டுமொத்த தமிழகமும் அவலுடன் காத்து கொண்டிருக்கிறது. இந்தியா முழுவதும் பிரதமர் மோடி வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் விரட்டியடிக்கப்பட்டார். தமிழகத்தில் இன்றும் ஒரு விக்கெட் மட்டுமே இருப்பதாகவும் எதிர்த்து நிற்பவர் டெபாசிட் கூட வாங்க கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.