அதிமுக ஆட்சியை சொடக்கு போடுற நேரத்துல கவிழ்க்க முடியும். ஆனால், கொல்லைப்புறமாக ஆட்சிக் கட்டிலில் அமரக்கூடாது என கலைஞர் சொல்லியிருக்கிறார். அதனால், அமைதியாக இருக்கிறோம் என மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார். 

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து கே.வி.குப்பத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இந்த ஆட்சிக்கு எடுபிடியாக இருப்பவர்தான் அவர்களின் வேட்பாளர் ஏ.சி.சண்முகம். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி. மக்களோடு இருக்கிறோம். சுகத் துக்க நிகழ்வுகளில் உரிமையோடு பங்கேற்கிறோம். அந்த உரிமையுடன்தான் உதய சூரியனுக்கு ஒட்டுக்கேட்டு வந்திருக்கிறோம். 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பொய்யான வெற்றி பெற்றதாக அதிமுகவினர் சொல்கின்றனர். பொய் என்று சொன்னாலும் பரவாயில்லை. வாக்காளர்களுக்கு 'மிட்டாய்' கொடுத்து தி.மு.க. கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றதாக அதிமுகவினர் கூறி வருகின்றனர். மிட்டாய் என்றால் என்ன கமரகட்டா? பல்லி மிட்டாயா? சரி அப்படியே நாங்க மிட்டாய் கொடுத்து ஜெயிச்சதாக வைத்துக் கொண்டாலும், தேனி தொகுதியில் நீங்கள் ஜெயிச்சீங்களே, அங்க நீங்க என்ன கொடுத்தீங்க? அல்வா. அதுவும் திருநெல்வேலி அல்வா இல்லை. டெல்லி அல்வா கொடுத்து ஜெயிச்சீங்களா? என கடுமையாக விமர்சனம் செய்தார். 

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். சட்டமன்ற இடைத் தேர்தலில் இன்றும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும். தற்போதும் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று கூற முடியாது. கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போன்று தமிழகத்திலும் ஏற்படலாம். மோடி நினைத்தால் அது நடக்கும். இங்கு ஆட்சியில் இருப்பவர்கள் மோடியின் காலில் விழுந்து கிடக்கிறார்கள்.

 

கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வராமல் மக்களின் ஆதரவை பெற்று வாக்குகள் வாங்கி ஆட்சிக்கு வரவேண்டும் என்று கருணாநிதி கூறுவார். அதன்படி மக்களின் ஆதரவை பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வரும். இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று ஸ்டாலின் கனவு காண்கிறார் என அ.தி.மு.க.வினர் விமர்சனம் செய்து வருகின்றனர். கனவு காண வேண்டிய அவசியம் இல்லை. விரைவில் ஆட்சி கவிழ்ப்பு நினைவாக போகிறது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.