வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிராக அதிமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என அத்தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி மணிக்குமார், சுப்ரமணியன் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வருகிறது. 

தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி (நாளை) நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 10ம் தேதி அறிவித்தது. இதையொட்டி அனைத்துக்கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, கடந்த ஒரு மாதமாக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் வருமானவரித்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 29-ம் தேதி வேலூர் காட்பாடியில் திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையின்போது 10 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைப்பற்ற ஆவணங்கள் அடிப்படையில் துரைமுருகனின் உதவியாளர் அஸ்கர் அலி, பூஞ்சோலை சீனிவாசனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான சிமென்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.11.48 கோடி பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் வேலூரில் ரூ.11.48 கோடி பறிமுதல் விவகாரத்தில் பூஞ்சோலை சீனிவாசன், கதிர் ஆனந்த் மீது காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இந்த சோதனை தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பி இருந்தது. இதனையடுத்து வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரி குடியரசுத் தலைவருக்கு  தேர்தல் ஆணையம் பறிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டார். 

இந்நிலையில் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் நாளை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன், இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.