வேலூர் மக்களவை தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலுக்கான பாதிப் பணிகளை அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முடித்துவிட்ட நிலையில் திமுக வேட்பாளர் தற்போது வரை வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளார்.

வேலூர் தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே ஏசி சண்மும் தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டார். சொல்லப்போனால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட பிறகும் கூட வேலூர் தொகுதியிலேயே தான் அவர் முகாமிட்டிருந்தார். இந்த நிலையில் ஏசி சண்முகத்தை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அதிமுக அறிவித்தது. இதன் பிறகு ஏசி சண்முகம் தரப்பு ஜோராக வேலைகளை தொடங்கியது. 

தேர்தல் அறிவிக்கப்பட்டு 2 வாரங்கள் கடந்த நிலையில் முதல் ஆளாக வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டார் சண்முகம். தற்போது பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் ஆலோசனை என்கிற ரேஞ்சில் அவர் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் திமுக தரப்போ தற்போது வரை வேலூரில் தேர்தல் பணிகளை துவங்கியதாகவே தெரியவில்லை. வேலூர் தொகுதி தேர்தல் பணி என்று சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியதோடு நிற்கிறது திமுகவின் தேர்தல் வேலை. 

கதிர் ஆனந்த் பிரச்சாரம் குறித்து கூட அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை. இதே போல் ஸ்டாலின், உதயநிதி போன்றோரின் பிரச்சார விவரங்களும் வெளியாகவில்லை. ஆனால் ஏசி சண்முகத்திற்கு ஆதரவாக லோக்கல் அமைச்சர் வீரமணி பம்பரமாக சுழன்று வருகிறார். சட்டப்பேரவை காரணமாக அவர் சென்னையில் இருந்தாலும் அதிமுக நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். 

இந்த நிலையில் அடுத்த வாரம் முதல் அமைச்சர்கள் படை வேலூர் செல்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அடுத்த வாரமே வேலூர் பிரச்சாரத்தை தொடங்க உள்ளதாக சொல்கிறார்கள். ஜெயலலிதா இருந்த போது நடைபெற்ற தேர்தல் பணிகளை போல ஒருங்கிணைத்து இந்த முறை தேர்தல பணிகளில் இறங்க அதிமுக வியூகம் வகுத்துள்ளது. இதற்காக மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பணியாற்றி வருவதாக சொல்கிறார்கள்.

 

இப்படி அதிமுக வேலூரை குறி வைத்து தீவிரமாக இயங்கி வரும் நிலையில் திமுக தரப்பில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தலை போல வேலூர் தேர்தலிலும் மக்கள் தங்களுக்கு வாக்களித்துவிடுவிர்கள் என்று திமுக தரப்பு நம்புவது போல் தெரிகிறது. ஆனால் ஆளும் கட்சி பிளஸ் மத்தியில் ஆளும் கட்சியுடன் கூட்டணி ஆகிய இரண்டு காரணங்கள் அத்தோடு ஏசி சண்முகத்தின் செல்வாக்கு போன்றவை வேலூரில் அதிமுகவிற்கே சாதமாக உள்ளதாக தெரிவிக்கிறது.