யூடியூபை க்ளிக் செய்தால் இப்போதும் ப்ரைம் லிஸ்டில் இருக்கிறது ’ஜெயலலிதாவை மகளிர் தினத்தில் வெளுத்து வாங்கிய பிரேமலதா’ எனும் ஹாட் ஸ்டோரி. அதேபோல் அ.தி.மு.க.வோடு கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய அதே வேளையில் தி.மு.க.பக்கமும் துண்டு போட்ட தே.மு.தி.க.வை விமர்சிக்கிறேன் பேர்வழியென்று அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதாவை ‘பேராசை பிரேமலதா’ என்று அ.தி.மு.க.வின் பல நிர்வாகிகள் மேடைகளில் பொளந்து கட்டிய வீடியோக்கள் வாட்ஸ் அப்களில் இன்னமும் நின்று விளையாடுகின்றன. 

இரு தரப்பும் ஒன்றோடு ஒன்று மூர்க்கத்தனமாக மோதியும், மிக கேவலமாக விமர்சித்தும் கொண்ட அசிங்கமெல்லாம் சில நாட்களுக்கு முன்பே முடிந்தது. இப்போது இருவரும் ஒரே கூட்டணி என்பதால், ஒருவரை மாற்றி ஒருவர் உறவு முறை சொல்லி உருகும் காட்சிகளைப் பார்க்க வேண்டுமே...உண்மையான அ.தி.மு.க. தொண்டனும், மிக உண்மையான தே.மு.தி.க. தொண்டனும் இந்த வார்த்தைகளை கேட்பதற்கு மனசில்லாமல் காதை அறுத்துக்குவான். 

சமீபத்தில் திருச்சியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன், பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வெல்லமண்டி ‘அம்மாவைப் போல ராணுவ கட்டுப்பாட்டுடன் கட்சியை நடத்துகிறார் பிரேமலதா.’ என்று மலைக்கோட்டை உசரத்துக்கு புகழ்ந்ததோடு, ஏதோ தே.மு.தி.க.வின் எட்டாவது வார்டு செயலாளர் ரேஞ்சுக்கு ‘அண்ணி! அண்ணி’ என்று  உருகி ஓடினார் பார்க்கணுமே, மண்டபமே நனைந்துவிட்டது. 

இதைக்கேட்டு ‘எப்பேர்ப்பட்ட அரசியல் ஆளுமை நம்ம அம்மா. அவங்க கூட இந்தம்மாவை கம்பேர் பண்றதுக்கு அமைச்சருக்கு வெட்கமா இல்லையா? எத்தனை தோல்வி வந்தப்பவும் கட்சியை  ஆடாமல் வெச்சிருந்தது அம்மாதான். ஆனால் நாற்பது இடத்துலேயும் நிக்குறதுக்கு ஆள் இல்லாமல், மாவட்ட செயலாளர் பதவியை கூப்பிட்டு கொடுத்தாலும் ஏத்துக்க தைரியமில்லாமல் எஸ்கேப் ஆகிற ஆளுங்களை வெச்சு கட்சி நடத்துறாங்க பிரேமலதா. ரெண்டு பேரும் ஒண்ணா? இப்படி பேசுனதாலே வெல்லமண்டி நமுத்துப் போயிட்டாரு.’ என்று வெளுத்தனர் விமர்சனங்களை. 

அமைச்சர் தன்னை ‘அண்ணி’ என்றபோது ரசித்து, மர்மமாய் புன்னகைத்த பிரேமலதா திருப்பூர் மாவட்ட சுற்றுப் பயணத்தின் போது ‘புரட்சித் தலைவி அம்மா, புரட்சித் தலைவி அம்மா’ என்று ஜெயலலிதாவை பல முறை குறிப்பிட்டார். 

இதைக்கேட்டு டென்ஷனான தே.மு.தி.க.வினர்...’இதுவா வீரம், அன்னைக்கு வார்த்தைக்கு வார்த்தை ஜெயலலிதா!ன்னு சொன்னப்ப பொருளாளரோட தைரியத்தை நினைச்சு சந்தோஷப்பட்டோம். ஆனா இன்னைக்கு கேவலம் கூட்டணிக்காக இப்படி ‘புரட்சித் தலைவி அம்மா’ன்னு சொல்லி அ.தி.மு.க. கால்ல விழுந்தது அசிங்கம். ஆக எல்லாமே நடிப்புதானா! திராணியாரின் மனைவி இப்படி பண்ணலாமா?’ என்று நொந்தனர். 

பிரேமலதாவும், அ.தி.மு.க. வி.ஐ.பி.க்களும் கூட்டணி ஓ.கே. ஆகும் முன் பொதுவெளியில் ஒருவர் மீது ஒருவர் குப்பைகளை அள்ளி கொட்டினர். இன்றோ அதே குப்பைகளின் மேல் நின்று கூட்டாக கொண்டாடுவது சந்தர்ப்பவாத அரசியலின் அபத்த முகம்.