திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக வீரபாண்டி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக தேர்தல் பணிக்குழுச் செயலாளராக பொறுப்பு வகித்த டி.எம் செல்வகணபதி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.ஆர்.என் ராஜேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 

மேலும், சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட வீரபாண்டி ராஜா தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டக் கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.