மத்திய பிஜேபி ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம் என திராவிடர்கழக தலைவர் கி வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய கல்வி கொள்கை கடந்த 1986ம் ஆண்டு உருவாக்கப்பட்டு பின்னர், 1992 ஆம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டது. அதன்பின்னர் தேசிய கல்வி கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக அபுதிய தேசிய கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை அளிக்க முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு ஈடுபட்டிருந்தது. இந்தப் பணிகள் முடிவடைந்து, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் புதிய கல்விக் கொள்கை வரைவு நேற்று  முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், நாட்டின் பரந்த நிலப்பரப்பு மற்றும் கலாச்சாரத்தை மாணவர்கள் அறிந்துகொள்ளவும் மும்மொழிக்கொள்கை கட்டாயமாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று  பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மும்மொழிக்கல்வி என்பது, தாய் மொழி, இணைப்பு மொழியான ஆங்கிலம் மற்றும் வேறொரு இந்திய மொழி என்று இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு இந்திய மொழி என்றும், இந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி, ஆங்கிலம்,  இந்தி என்றும் மூன்றாவது மொழித்தேர்வு இருக்க வேண்டும் என்று வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களில், மூன்றாவது மொழியை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தி பேசாத மாநிலங்களில், கட்டாயம் மூன்றாவது மொழியாக இந்தியை இணைக்க வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

யோகா, நீர்மேலாண்மை உள்ளிட்டவற்றையும் பாடமாக்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய கல்விக்கொள்கை வரைவு மீது ஜூன் 30ஆம் தேதி வரை, nep.edu@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்களும், கல்வியாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்பதற்காக https://mhrd.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை இதுகுறித்து திரவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு மொழி மட்டுமே தமிழ்நாட்டில்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டும் தான் - இரு மொழிக் கொள்கைதான் என்று அறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது சட்டமே இயற்றப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் மத்திய பிஜேபி ஆட்சி வீண் வம்பை விலைக்கு வாங்க வேண்டாம் என்று எச்சரிக்கின்றோம். தமிழ்நாடு முதல் அமைச்சரும், கல்வி அமைச்சரும்  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு இருமொழிதான், மூன்றாவது மொழிக்கு - இந்திக்கு இடமில்லை என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதில் உறுதியாக இருக்க வேண்டும் . மத்திய அரசின் வற்புறுத்தலுக்கு வழக்கம் போல அடி பணிந்து விடக் கூடாது என்பதே நமது அழுத்தமான வலியுறுத்தலாகும் என கூறியுள்ளார்.