தமிழகத்தில் சமீபகாலமாக மிகப்பெரிய பேசுபொருளாக உருவெடுத்தது ரஜினியின் ஆன்மீக அரசியல் தான்.  ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்ற விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது.

ஆன்மீக அரசியல் என்றால் நேர்மையான, தூய்மையான, உண்மையான அரசியல் என்று அர்த்தம் என ரஜினிகாந்த் விளக்கமளித்தார். ரஜினி விளக்கமளித்தாலும் அதுதொடர்பான விவாதம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.

ரஜினியின் பின்னிருந்து பாஜக இயக்குவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விமர்சனத்தை உண்மையாக்கும் விதமாகத்தான் ரஜினியின் ஆன்மீக அரசியல் என்ற கூற்று இருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியிடம், ரஜினியின் ஆன்மீக அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வீரமணி, ஆன்மீக அரசியல் என்றால் நேர்மையான, உண்மையான அரசியல் என்று ரஜினி கூறுகிறார். அப்படியென்றால், நேர்மையான, உண்மையான அரசியல் என்று சொல்லிவிட வேண்டியதுதானே? அப்புறம் எதற்கு ஆன்மீக அரசியல் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார்? யாரை ஏமாற்ற நினைக்கிறார்?

ஆன்மீக அரசியல் என்று கூறி, தமிழக மக்களை குழப்புகிறார். இல்லையென்றால் ஏமாற்றுகிறார். இந்த இரண்டில் ஒன்றை செய்யத்தான் ரஜினி முயற்சிக்கிறார் என வீரமணி விமர்சித்தார்.