புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகரும் அகரம் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளருமான சூர்யா பேசிய பேச்சு அவருக்கு கடுமையான எதிர்ப்புகளை கிளப்பிவிட்டிருக்கிறது. சூர்யா வன்முறையைத் தூண்டுகிறார் என்று ஹெச்.ராஜா சொன்னார். ‘இந்த புதிய கல்விக் கொள்கையை அதைப் பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள். உதய சூரியனை சின்னமாக கொண்டவர்தான் பேசுகிறார்கள் என்றால், நடிகர் சூர்யாவும் பேசுகிறார்’ என்று தமிழிசை சொன்னார். அதேபோல சினிமா துறையை உள்ளடக்கிய செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜூ, ‘சூர்யா அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறார்’ என்று கடுமையாக பேசினார்.

புதிய கல்விக் கொள்கை பற்றி நடிகர் சூர்யாவின் பேச்சுக்கு பிஜேபி மற்றும் அதிமுக தரப்பில் கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். நடிகர் கலைஞர் சூர்யாவுக்குக் கருத்துக் கூற உரிமை இல்லையா? என கி.வீரமணி சூர்யாவுக்கு ஆதரவாக தனது கண்டனக் குரலை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;  அந்த வரிசையில் பிரபல திரைப்பட நடிகரும், சமுகத்திற்கு  தங்களது அறக்கட்டளைமூலம் பல கல்வி நிறுவனங்களுக்கும், ஏழை, எளிய மாண வர்கள் படிப்பிற்கும் உதவிடும் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில், மேனாள் துணைவேந்தர் திருமதி வசந்திதேவி போன்றவர்களை அழைத்து - கருத்து, அறிவுரைகளைக் கேட்டும், அவர்களே ஆராய்ந்தும், இந்த வரைவுத் திட்டத்தினால் ஏராளமான அளவில் - பல தேர்வுகளைத் திணிப்ப தினால், மாணவர்களின் இடைநிற்றல்(Dropouts) அதிகம் ஏற்படக்கூடும் என்பது போன்ற மறுக்கப் பட முடியாத பல கருத்துகளை, கூறியதோடு, ‘மக்கள் இதனை ஏற்பதில் விழிப்புடன் இருக்கவேண்டும்' என்றும் நடிகர் கலைஞர் சூர்யா அவர்கள் கூறினார். அது தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகியது.

ஜனநாயகத்தில் எந்த குடிமகனுக்கும் கருத்துக்கூற உள்ள உரிமையை எந்த அரசும், தனி நபர் களும் தடுக்கவோ, பறிக்கவோ, மிரட்டவோ, அச்சுறுத்தவோ, அதை வைத்து வேறு வழிகளில் பழிவாங்கவோ உரிமை இல்லை, தமிழக பா.ஜ.க.வின் தலைவர், மற்றொருவக் கணை வாய்ப்பேச்சுக்காரர் - மன்னிப்புக் கேட்டு மண்டியிட்ட மமதைக்காரர், மாநில மந்திரி ஒருவர் நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும் என்று பேட்டி கொடுத்து, தங்களது மேதாவிலாசத்தைக் காட்டியிருக்கிறார்கள்!

கருத்துச் சொல்லுங்கள் என்று கேட்டுவிட்டு, மக்களை நாட்டைப் பாதிப்பதால் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்கவேண்டும் என்று கருத்துக் கூறினால் அது தூண்டிவிடுவது' ஆகி விடுமா?

புயல் எச்சரிக்கை, நோய் எச்சரிக்கை விடும் வானிலை ஆய்வாளர்கள் எல்லாம் மக்களை அச்சுறுத்துபவர் களாவார்களா? என்னே மமதை! எவ்வளவு பேதமை!

ஜனநாயக நாட்டில் மக் களின் குரல் வளையை நெரிப்பதா? வாக்குரிமை உள்ள எவரும் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம், சமுதாயத்தின் முன்னேற்றம்பற்றி கவலைப்படத் தான் செய்வார்கள். என ஆவேச அறிக்கை வெளியிட்டுள்ளார்.