vedharanyam government hospital issue
நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், இறந்தவரின் உடலை 6 கிமீ உறவினர்கள் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் மணியன் தீவு கிராமத்தை சேர்ந்த நடராஜன் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன், அவரது வீட்டிற்கு உடலை செல்வதற்கு அந்த மருத்துவமனையில் அமரர் ஊர்தி கிடையாது.
உடலை எடுத்து செல்வதற்கு இறந்தவரின் உறவினர்கள், அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி கேட்டுள்ளனர். ஆனால், அமரர் ஊர்தி இல்லை என்றவுடன், வேறு வழியின்றி மருத்துவமனையிலிருந்து உடலை உறவினர்கள் தூக்கி சென்றனர்.
வேதாரண்யத்திலிருந்து மணியன் தீவு கிராமம் 6 கிமீ தொலைவில் உள்ளது. இறந்த நடராஜனின் உடலை அவரது உறவினர்கள், 6 கிமீ சுமந்துசென்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள், வடமாநிலங்களில் அவ்வப்போது நடைபெற்றுவந்தது. வடமாநிலங்களில் ஏன் இந்த அவலநிலை உள்ளது என நினைத்துக்கொண்டிருந்தவர்களுக்கு, தமிழகத்திலேயே இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் தமிழகத்தில் தான் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றும், மருத்துவத்துறையில் தமிழகம் தான் நம்பர் ஒன் என்றும் மார்தட்டும் ஆட்சியாளர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் அமரர் ஊர்தி கூட இல்லாததற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
