ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பதவிக்கு வேதாந்தா குழுமம் குறி வைத்துள்ளதாக தலைமைச் செயலகத்திலும் டெல்லியிலும் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன. 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் தடலாடியாக முடிவெடுத்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை திடீரென மூடப்பட்டது. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான அரசாணை வெளியான அன்றே மாலையே மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆலைக்கு சீல் வைத்தார்.

ஸ்டெர்லைட்டுக்கு சீல் வைக்கப்பட்டது என்பது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே அன்று பார்க்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்று அரசு வழக்கறிஞர் கூறியது வேதோந்த குழுமத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும் வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்தன.
 

சரி நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெற்று ஒரு மூன்று மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் துவக்கிவிடலாம் என்றே வேதாந்தா உரிமையாளர் அனில் அகர்வால் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை துண்டித்ததுடன் உள்ளே இருந்த அமிலங்களையும் தமிழக அரசே அகற்ற ஆரம்பித்தது அனில் அகர்வாலை கடும் டென்சனாக்கியுள்ளது.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.கவுக்கு மிகவும் நெருக்கமானவர் அனில் அகர்வால். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.கவுக்கு அதிகம் டொனேசன் கொடுத்த நிறுவனங்களில் முதன்மையானது வேதாந்தா. அதிலும் ஸ்டெர்லைட் ஆலையின் லாபத்தில் இருந்தே பா.ஜ.கவிற்கு நன்கொடை கொடுத்துள்ளது வேதாந்தா. அப்படி இருக்கையில் பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் போதே ஸ்டெர்லைட் மூடப்பட்டது அனில் அகர்வாலை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது.

தனது அதிருப்தியை பா.ஜ.க மேலிடத்திற்கு நேரடியாகவே அனில் அகர்வால் கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் சற்று மென்மையான போக்கை கடைபிடிக்கும் படி மேலே இருந்து உத்தரவு வந்துள்ளது. ஆனால் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் ஸ்டெர்லைட் ஆலைக்குள் இருந்து அமிலங்களை வெளியேற்றும் பணி தொடர்கிறது.

இதற்கெல்லாம் காரணம் தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி தான் என்று வேதாந்தா குழுமம் நம்புகிறது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க மேலிட தலைவர்களை வேதாந்தா நிர்வாகிகள் அணுகியுள்ளனர். மேலும் முடிந்தால் முதலமைச்சரையே தமிழ்நாட்டில் மாற்ற வேண்டும் என்று வேதாந்தா வலியுறுத்துவதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை, பா.ஜ.க மூத்த தலைவர்கள் – அ.தி.மு.க மூத்த தலைவர்கள் இடையே வார்த்தை யுத்தம் எல்லாம் தொடங்கியுள்ளது. இதன் பின்னணியில் கூட வேதாந்தா இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி முதலமைச்சரை அல்லது ஆட்சியையே மாற்றும் நடவடிக்கை டெல்லியில் தொடங்கியுள்ளதை மாநில உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது.

உளவுத் தகவல்களை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் எதுவாக இருந்தாலும் பார்த்துவிடலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளதாகவும், இருந்தாலும் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தான் தனது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது என்றும் எடப்பாடி யோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.