ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 40  நாடாளுமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் 18 சட்டசபைகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் திமுக  தலைமையில் 8 கட்சிகள் பங்கேற்கும் மெகா கூட்டணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
 
திமுக 20, காங்கிரஸ் 10, இடது சாரிகள், விசிக தலா 2 , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, கொமதேக 1, ஐஜேகே 1 மதிமுக 1 என போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட உள்ளன என்பது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல் விசிக, ஐஜேகே. கொமதேக. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற விசிக தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலினிடமும் துரைமுருகன் குழுவினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டோம். அதை திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார். எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறோம் என்பதை உரிய நேரத்தில் அறிவிப்போம்” என்று தெரிவித்துள்ளார்

இரண்டு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் தேர்தல் செலவுக்காக தலா 20 கோடி தருகிறோம் என்று திமுக சார்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதனிடையே  ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிடுகிறோம் என்ற திமுகவிடம் திருமாவளவன் யோசனை தெரிவித்துள்ளார்.

திருமா  தனிச் சின்னத்திலும், மற்றொரு வேட்பாளரை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைக்கலாம் என்பதும் அவரது ஐடியாவாக உள்ளது. ஆனால் வரது யோசனையை திமுக ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட மோதிரம் சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் , தங்கள் கட்சிக்கு தனிச் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தை அணுகிட விசிக முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.