திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் தொ. திருமாவளவன் திடீரென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேசினார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் இருந்ததைப்போல திமுக, அதிமுக கூட்டணிகள் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவர் திருமாவளவன் இரு தினங்களுக்கு முன்பு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். பிறகு, ‘சட்டப்பேரவைத் தேர்தல் வரை திமுக கூட்டணியில் தொடருவோம்’ என்று தெரிவித்தார். இந்நிலையில், திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய முகாம் இல்லத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பேசினார். 
இந்தச்  சந்திப்பு சுமார் அரை மணி நேரம்வரை நீடித்தது. சந்திப்புக்கு பிறகு தான் ஏன் முதல்வரை சந்தித்தேன் என்பது பற்றி தொல். திருமாவளவன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். “உள்ளாட்சித் தேர்தலில் துணை தலைவர் பதவிகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றும்  சென்னை மாநகராட்சியைத் தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையைத் தமிழக அரசு ஈடுகட்டி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் அளித்துள்ளேன். அதற்காகத்தான் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.


இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றிருப்பது கவலையும் வேதனையும் அளிக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலையை அரங்கேற்றியவர் கோத்தபய ராஜபக்சே. அவர் அதிபர்  தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அங்கு வாழும் தமிழக மக்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஈழ படுகொலை விவகாரத்தில் தமிழக மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை வீண் போய்விட்டது” என்று திருமாவளவன் தெரிவித்தார்.