சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் தயாராகிவருகின்றன. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளும் தேர்தலுக்குத் தயாராகிவிட்டார்கள். விசிக சார்பில் தேர்தல் பணிக்குழுக்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அமைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்வரும் சட்டப்பேரவை பொதுத் தேர்தலையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குரிய அடிப்படையான தேர்தல் பணிகளை மேற்கொள்ள பணிக் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.


கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் அறிக்கையை வரையறுப்பதற்கான 'தேர்தல் அறிக்கை வரைவுக்குழு' ; கட்சியின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் மக்கள்நலம் சார்ந்த கட்சியின் பணிகள் போன்றவற்றை சமூக ஊடகம் உள்ளிட்ட அனைத்துத் தளங்களின் வழியாக வெகுமக்களிடையே பரப்பும் வகையிலான ஏற்பாடுகளை செயவதற்குரிய 'தேர்தல் பிரச்சாரப் பணிகள் குழு ' ; மற்றும் தேர்தலை எதிர்க் கொள்வதற்கு போதிய பொருளாதாரத்தைத் திரட்டுவதற்கான 'தேர்தல் நிதிக்குழு' ஆகியவை நியமிக்கப்படுகின்றன.


இதன்படி தேர்தல் அறிக்கை வரைவுக் குழுவில், துரை.ரவிக்குமார் (தலைவர்), நீலவானத்து நிலவன், கௌதம சன்னா, அ.பாலசிங்கம், எழில்.கரோலின், வெ.கனியமுதன், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், முனைவர் மகாதேவன், பேரா.தமிழ்குமரன், ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோரும் தேர்தல் பிரச்சாரப் பணிக் குழுவில் சிந்தனைசெல்வன் (தலைவர்), வன்னிஅரசு, பொதினிவளவன், மு.கலைவேந்தன், சிபி சந்தர், இளமாறன், சஜன் பராஜ், ஆதிமொழி, யாழன்ஆதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.” என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.