திரைத் துறையில் சாதித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில்,  ‘கமல்ஹாசனைவிட திரைத்துறையில் சாதனைகள் புரிந்தவர்கள் வேறு யார்?’ விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவாவில் 50-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் பொன் விழாவையொட்டி நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் கோல்டன் ஜூப்ளி’ என்ற சிறப்பு விருது வழங்கப்படும் மத்திய  தகவல் தொடர்பு, ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். ரஜினிக்கு விருது அறிவிக்கப்பட்டதை அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.
பாஜகவில் சேர வேண்டும் என்று ரஜினியை பாஜக தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், அதை மனதில் வைத்துதான் இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது என்ற விமர்சனமும் பொதுவெளியில் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஜினிக்கு விருது வழங்கப்படும் என்ற அறிவிப்பை விசிக பொதுச்செயலாளரும் விழுப்புரம் தொகுதி எம்.பி.யுமான ரவிக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர், கலைத்துறையில் 60 ஆண்டுகள் பணியாற்றியவர் கமலஹாசனை (@ikamalhaasan) விட திரைத்துறையில் சாதனை புரிந்தவர்கள் வேறு யார் ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.