அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இன்று காலவரம்பற்ற உள்ளிருப்பு  அறப்போராட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. நான்கு முதன்மையான கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்களின் இந்த போராட்டம் நடைபெறுகிறது. காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு  அளிக்கப்படும் என திமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும்; நோயாளிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் மருத்துவர்களின் எண்ணிகையை உயர்த்திட வேண்டும்;

அரசு மருத்துவர்களுக்கு பட்ட மேற்படிப்பு படிப்பதற்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்; பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் பணிநியமனம் வழங்க வேண்டும் என்கிற இந்த நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இப்போராட்டம் நடைபெறுகிறது. இந்த நான்கு கோரிக்கைகளும் அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தக் கூடிய  கோரிக்கைகள் அல்ல. இதனால் அரசுக்கு பொருளாதார நெருக்கடியோ, நிர்வாக நெருக்கடியோ ஏற்படாது. ஆனாலும், அரசு இதில் மெத்தனம் காட்டுவது அதிர்ச்சியளிக்கிறது. 

அரசு மருத்துவர்கள் இப்படி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை கருத்தில்கொண்டு தமிழக அரசு போராட்டக் குழுவினரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். அரசு மருத்துவர்களின் நியாயமான, ஜனநாயகப்பூர்வமான இந்த நான்கு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கு அரசு முன்வரவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.