குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திசம்பர் 14 அன்று  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர்  தொல் . திருமாவளவன் அறிவித்துள்ளார்.  இது குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,   தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய மக்களை மத, இன அடிப்படையில் பாகுபடுத்துகிறது.  இது அரசியலமைப்புச்சட்டத்துக்கு எதிரானதாகும்.  இந்த சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எதிர்வரும் 14 12 2019 சனிக்கிழமை அன்று சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் (எனது தலைமையில்) நடைபெறுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தியாவுக்கு சுதந்தரத்தை வாங்கித்தந்த தலைவர்களோ,  அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த புரட்சியாளர் அம்பேத்கரோ
 ஏற்றுக்கொள்ளாத மத அடிப்படையிலான பாகுபாட்டை பாஜக அரசு சட்டபூர்வமாக்க முயற்சிக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தாகும். அண்டை நாடுகளிலிருந்து அந்த அரசுகளால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்தவர்களுக்குக் குடியுரிமை தருகிறோம்  என்ற பெயரில் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளை மட்டும் குறிப்பிட்டு அந் நாடுகளில் இருந்து அகதிகளாக வந்திருப்போரில்  முஸ்லிம்கள் தவிர மற்ற மதத்தவருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

இது அடிப்படையில் குடிமக்களை மதரீதியாக பாகுபடுத்துவதாகும். இந்த மூன்று நாடுகளும் இஸ்லாம் மதத்தை அரச மதமாக ஏற்றுக் கொண்டாலும் இந் நாடுகளில் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அகமதியா, ஷியா பிரிவுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதுமட்டுமின்றி மத நம்பிக்கை இல்லாத பகுத்தறிவாளர்களும் இந்த அரசுகளால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்குள் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்க முடியாது என்று இந்த சட்டத்தில் கூறப்படுகிறது. இந்த அரசு குறிப்பிட்டுள்ள நோக்கத்துக்கு இது எதிரானதாகும். 

 அண்டை நாடுகள் என்னும் போது மியான்மர், இலங்கை ஆகியவற்றை இந்த சட்டம் உள்ளடக்கவில்லை. அந்த நாடுகளில்
 பௌத்தம் அரச மதமாக உள்ளது. அந்த அரசுகளால் பாதிக்கப்பட்டு ஏராளமானவர்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். மியான்மர் அரசால் பாதிக்கப்பட்டு ரோகிங்கியா முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கானோர் இந்தியாவுக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். அதுபோலவே இலங்கையின் பேரினவாத அரசால் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவுக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்களுக்கெல்லாம் குடியுரிமை வழங்க இந்த சட்டத்தில் வகை செய்யப்படவில்லை .

 

இந்த சட்டம் மத அடிப்படையில் முஸ்லிம்களையும், இன அடிப்படையில் தமிழர்களையும் விலக்கி வைத்துவிட்டு மற்றவர்களை இந்திய குடிமக்களாக அங்கீகரிக்கிறது. இது ஏற்புடையதல்ல. நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கும் பலத்தை வைத்துக்கொண்டு இந்த சட்டத்தை பாஜக அரசு இயற்றினாலும் இது உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்படும் என்று நம்புகிறோம். இந்த சட்ட விரோத சட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை. எனவே இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்க அறைகூவி அழைக்கின்றோம்! 
என அதில் அவர் தெரிவித்துள்ளார்.