தமிழிசையை அரசியலிலிருந்து இல்லாமல் செய்துவிட்டார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்திதொடர்பாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் என்ற அந்தஸ்தையும், இந்தியாவில் உள்ள ஆளுநர்களில் வயது குறைந்தவர் என்ற பெருமையும் தமிழிசைக்குக் கிடைக்க உள்ளது. தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதை கட்சி வேறுபாடுகளைத் தாண்டி எல்லா அரசியல் கட்சிகளின்  தலைவர்களும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். அவருடைய உழைப்புக்குக் கிடைத்த மரியாதை என்று தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியியும் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், தமிழிசையை அரசியலில் இல்லாமல் செய்துவிட்டார்கள் என்று விசிக செய்தித் தொடர்பாளர் வன்னியரசு வேறொரு கோணத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார். தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். நிர்மலா சீதாராமன் தேர்தலில்கூட போட்டியிடாமல் நாடாளுமன்ற உறுப்பினராக்கி மத்திய அமைச்சராக்கி அழகுபார்க்கிறார்கள். தமிழிசையையும் மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கலாமே. அவர் இந்தியா முழுவதுக்கும் அமைச்சராகி இருப்பார்.  ஆளுநர் பதவி என்பதே ஓய்வு பதவிதான். வயது குறைவாக உள்ள தமிழிசையை அந்தப் பதவியில் நியமித்திருப்பதன் மூலம், அவரை அரசியலில் இருந்து இல்லாமல் செய்திருக்கிறார்கள்” என்று வன்னியரசு  தெரிவித்தார்.
இதேபோல இன்னொரு டிவி விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த ஆளூர் ஷா நவாஸ், “இன்று தமிழகத்தில் பாஜக தெரிவதற்கு தமிழிசை முக்கிய காரணாம். கடந்த 5 ஆண்டுகளாக பாஜகவுக்காக இங்கே உழைத்திருக்கிறார். நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன் இங்கே என்ன உழைப்பை செய்திருக்கிறார். வெளியுறவுத் துறை அமைச்சரான சிவசங்கர் என்ன உழைப்பை செய்திருக்கிறார். பதவி தருவதில்கூட பாஜகவின் பார்வை ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது” என்று தெரிவித்தார்.