VCK Leader Thol. Thirumalavan Condemned

கல்லூரி வகுப்பாசிரியர்கள், துறை தலைவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம்; ஆனால் அதனை மாணவர்களிடம் திணிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்றும் மாணவன் பிரகாஷ் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவதாகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் ஓவியம் மற்றும் சிலை செய்வதி கொண்ட ஆர்வத்தால் சென்னை தனியார் கலை கல்லூரியில் சேர்ந்த 4 ஆம் ஆண்டு படித்து வந்தார். தனது துறைத் தலைவர் தனக்கு டார்ச்சர் கொடுத்ததாகவும், தான் கனவாக எண்ணி வடிவமைத்து வந்த சிலையை செய்ய விடாமல் தடுத்ததால் மனமுடைந்ததாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது
நண்பர்களுக்கு ஒரு விடியோ ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

அந்த வீடியோவில், துறைத் தலைவர் ரவிக்குமார் தனக்கு மிகவும் நெருக்கடி கொடுத்து வருவதாகவும், எந்த வேலையையும் முறையாக செய்ய விடுவதில்லை என்றும் மத ரீதியாக என்னிடம் பாகுபாடு பார்க்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் சர்ச்சுக்கு செல்ல வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார் என்றும் தன்மானத்தைவிட்டு கொடுத்துவிட்டு படிப்பை தொடர முடியாது எனவும் அதில் குறியுள்ளார். மேலும் மன உளைச்சல்
காரணமாக நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றும் அதில் கூறியிருந்தார். இந்த நிலையில், பிரகாஷ் அடுக்கம்பாறையில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்றிரவு, அடுக்கம்பாறை அருகே உள்ள குழவிமேடு பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாணவன் பிரகாஷ் தற்கொலை குறித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை, சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, கல்லூரி வகுப்பாசிரியர்கள், துறை தலைவர்கள் எந்த மதத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம் ஆனால் அதனை மாணவர்களிடம் திணிப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல என்றார்.

பிரகாஷ், தன்னை ஒரு இந்துவாக கருதுவது அவருக்குள்ள சுதந்திரம். பிரகாஷ் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தவர்தான். அவரது தாயார் செந்தாமரை, தந்தையார் பார்த்திபன். மாணவன் பிரகாஷ், ஜோயல் பிரகாஷ் என்று அழைத்து கொண்டதற்கு அவனுக்குள்ள நம்பிக்கை. அரசு ஆவணங்களில் பிரகாஷ் என்றுதான் பதிவாகியுள்ளது.

தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டிருக்கிறார்கள் என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது. அவர் விருப்பப்படி சுதந்திரமாக சிற்பக்கலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்ற நிர்பந்தமும் விதிக்கப்பட்டுள்ளது.

அவன் உருவாக்கிய தாயின் சிற்பத்தை பேராசிரியர்கள் உதாசீனப்படுத்தியும், இழிவுபடுத்தியும், காயப்படுத்தியும் உள்ளனர். இதனால்தான் அவன் தன்னை மாய்த்துக் கொண்டுள்ளான். கல்வி வளாகத்துக்குள் சாதி, மதம் மேலாதிக்கம் செய்வது மிகவும் ஆபத்தானது. 

அவன் மிக தெளிவாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான். யார் யார் என்றும் கூறியுள்ளான். இந்த மாணவன் உயிரோடு இருந்திருந்தால் சிறந்த சிற்ப கலைஞராக இருந்திருப்பான். பிரகாஷ் தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வற்புறுத்துவதாகவும், மாணவனுக்கு நீதி கோரி தொடர்ந்து போராடுவோம் என்றும் தொல்.திருமாவளவன் கூறினார்.