Asianet News TamilAsianet News Tamil

தப்லீக் ஜமாஅத் முஸ்லீம்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்..!! பொங்கி எழுந்த திருமாவளவன்..!!

129 முஸ்லிம்களையும் எந்த ஒரு வசதியும் இல்லாத தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து தொடர்ந்தும் அவர்களை தண்டித்து வருகிறது. இது இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்வின்  வெளிப்பாடோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது. 

vck leader thirumavalavan statement for regarding thablic jamath
Author
Chennai, First Published Jul 4, 2020, 6:17 PM IST

தப்லீக் ஜமாஅத் முஸ்லிம்களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்ட தப்லீக் ஜமாஅத் அமைப்பைச் சேர்ந்த 129 முஸ்லிம்கள் விசா விதிமுறைகளை மீறியதாக கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் பிணை வழங்கி அவர்களை சொந்த நாட்டுக்கு செல்ல நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதுவரை அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்காமல் புழல் சிறையில் அவர்களை தமிழக அரசு அடைத்து வைத்திருக்கிறது. 129 முஸ்லிம்களையும்  அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஒன்பது நாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்கள் மீது விசா விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

vck leader thirumavalavan statement for regarding thablic jamath

அவர்களில் 98 பேருக்கு முதலில் பிணை வழங்கிய நீதிமன்றம் அவர்கள் தங்கள் இருப்பிடத்தை தெரிவித்துவிட்டு சென்னையில்  சொந்தப் பொறுப்பில் தங்கியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்த நிலையில் எஞ்சியிருந்த 31 வெளிநாட்டவருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை பிணை வழங்கி இருக்கிறது. அவர்கள் கொரோனா பரப்பியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும், விசா விதிமுறை மீறலுக்கான போதுமான அளவு தண்டனையை அவர்கள் அனுபவித்து விட்டார்கள் என்றும் கூறியுள்ள உயர்நீதிமன்றம், இதை வைத்துக்கொண்டு அவர்கள் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால் அவர்களது வழக்கை முடித்து அவர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி  வைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இவ்வாறு உத்தரவிட்ட பிறகும் கூட அவர்கள் அனைவரையும் விதிமுறைகளுக்கு மாறாக புழல் சிறையில் உள்ள தடுப்பு முகாமில் தமிழக அரசு தங்க வைத்துள்ளது.

 vck leader thirumavalavan statement for regarding thablic jamath

விசா விதிமுறைகளை மீறும் அயல்நாட்டவர்களை தடுப்பு முகாம்களில் தங்க வைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு 2019 ஜனவரியில் வெளியிட்டிருக்கிறது,  அதில் சிறை வளாகத்திற்குள் இத்தகைய தடுப்பு முகாம்கள் இருக்கக்கூடாது என்று குறிப்பாக அறிவுறுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மத்திய அரசின் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு மாறாக தமிழக அரசு 129 முஸ்லிம்களையும் எந்த ஒரு வசதியும் இல்லாத தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்து தொடர்ந்தும் அவர்களை தண்டித்து வருகிறது. இது இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்வின்  வெளிப்பாடோ என்ற ஐயம் நமக்கு ஏற்படுகிறது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 129 முஸ்லிம்களையும் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்காக நடவடிக்கையை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும் அதுவரை அவர்களை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையிலுள்ள அரபுக் கல்லூரியிலோ அல்லது அதுபோன்றதொரு இடத்தில் தங்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios