வேறு வழியேயில்லை! - எனும் நிலையில்தான் ஸ்டாலினை அறிவாலயம் சென்று நேரில் சந்தித்துவிட்டார் திருமா. எல்லாம் துரைமுருகன் கிளப்பிய பூதம்தான். வி.சி.க மற்றும் ம.தி.மு.க. இருவரும் நண்பர்கள்தான். எங்களுக்குள் இன்னும் கூட்டணி ஏற்படவில்லை.’ என்று எந்த முகூர்த்தத்தில் வாய் திறந்தாரோ அவர், திருமா மற்றும் வைகோ இருவருக்கும் வயிற்றில் புளி கரைந்துவிட்டது. 

எதிர்வரும் தேர்தல்களில் வலுவான கூட்டணியில் நின்று சில வெற்றிகளை சம்பாதிக்கவில்லையென்றால் அடுத்த சில ஆண்டுகளுக்கு கட்சியே நடத்த முடியாத நிலைக்கு ஆளாகிவிடுவோம்! என்பது அவர்களின் பயம். இந்த சூழலில் துரைமுருகனின் கூற்றை பொய்யாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். ஏகத்துக்கும் இறங்கிவந்த திருமா, ‘நான் ஸ்டாலினை நேரில் சென்று சந்திக்கிறேன்’ என்றார். இதை அவரது வலது கரமான வன்னியரசு உள்ளிட்ட சிலர் எதிர்பார்க்கவுமில்லை, விரும்பவுமில்லை. ‘அண்ணே அது உங்களோட தன்மானத்துக்கு...’ என்று அவர்கள் இழுக்க, ‘அதெல்லாம் யோசிக்க கூடாதுய்யா. 

இதெல்லாம் அரசியல்ல சகஜம். ஓவரா வீஞ்சிட்டு இருந்தா இயக்கத்தை உயர்த்திட முடியாது. போன சட்டமன்ற தேர்தல்ல ‘மக்கள் நல கூட்டணி’ன்னு ஒன்றை நாம உருவாக்காம இருந்திருந்தால் இன்னைக்கு ஸ்டாலின் முதலமைச்சரா கூட இருந்திருப்பார். ஆனால் அதை மறந்து பொது இடத்துல என்னைப் பார்த்து பேசுறார், சிரிக்கிறார். விடுங்க, விடுங்க. ஆனைக்கும் - பானைக்கும் சரி’ன்னு போயிடலாம்.” என்று அவர்களின் வாயை அடைத்துவிட்டார்.

 

இதன் பிறகே வன்னி உள்ளிட்டோர் முக்கால் மனதுடன் சம்மதிக்க, ஸ்டாலின் பி.ஏ.விடம் டைம் கேட்டது திருமாவின் உதவியாளர் தரப்பு. ஸ்டாலினை அவரது வீட்டில் சந்திக்க ஆசைப்பட்டார் திருமா. அது தங்களிடையேயான நெருக்கத்தை மேலும் வீரியாமாக அதிகப்படுத்திக் காட்டும், அப்படி காட்ட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால் அறிவாலயத்தில் சந்திப்புக்கு ஏற்பாடு நடந்தது. 

ஸ்டாலினை திருமா சந்தித்து பேச துவங்கிய சுமார் இருபது நிமிடம் கழித்தே கலகக்காரர் துரைமுருகன் அங்கே வந்தார். அவருடனும் திருமா நட்பு முகம் காட்டிப் பேசிவிட்டு வந்தார். வெளியே வந்த திருமா “இந்த சந்திப்பு ஒரு வாரத்துக்கு முன்பேயே திட்டமிடப்பட்டது, திடீரென நடக்கவில்லை. டிசம்பரில் திருச்சியில் நாங்கள் நடத்தும் மாநாட்டில் ஸ்டாலின் நிச்சயம் பங்கு பெறுகிறார். 

தி.மு.க.வுடன் நெருங்கிய நட்பில் உள்ளோம்.” என்று பொத்தாம் பொதுவாக பேசிக் கொண்டிருந்தவரிடம், மீண்டும் மீண்டும் ‘துரைமுருகனை சந்தித்தீர்களா?’ என்று கேட்டபோது “ ஆம் மகிழ்ச்சியுடன் இருவரும் பேசிக் கொண்டோம்.” என்றார், கார் நோக்கி நகர்ந்த திருமாவிடம், ‘ஆனால் துரைமுருகனின் அன்றைய பேட்டி வேறு லெவலில் இருந்ததே!’ என்று கேட்கப்பட, ‘அவர் அன்று அப்படி பேசியது யதார்த்தமானதுதான். ஸ்டாலினுடன் எனக்கு நெருக்கமான நட்பே உள்ளது. ஆனால் வதந்தி கிளப்புகின்றனர்.” என்றபடி காரில் ஏறினார். 

துரைமுருகன் பற்றி மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டபோது, சற்று பல்லைக் கடித்தபடிதான் அந்த கேள்விக்கான பதிலை சொல்லி கடந்து வந்தார் திருமாவளவன்! என்றே அவரது இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர். தங்கள் தலைவருக்கு இப்படியொரு இக்கட்டான சூழலை உருவாக்கியதால் துரைமுருகன் மீது பெரும் எரிச்சலிலும் உள்ளனர். ’வதந்தி கிளப்புகின்றனர்’ என்று திருமா குறிப்பிட்டது கூட துரையைத்தான்! என்பதே விடுதலை சிறுத்தைகளின் மேல் மட்டத்தில் ஓடும் ஹைலைட் கிசுகிசு.