தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுவது ’காந்தி’ குடும்பம். சஞ்சய்காந்தியின் மறைவுக்கு பின் காந்தி குடும்பத்தில் எழுந்த கருத்து வேறுபாடுகளால் அவரது மனைவியான மேனகா காந்தி பாஜகவில் சேர்ந்தார்.

தற்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக மேனகாவும், அவரது மகன் வருண் உபியின் சுல்தான்பூர் தொகுதி எம்பியாகவும் உள்ளனர். சகோதரர் வருணுடன் ராகுல் காந்தி மற்றும் பிரியங்காவின் சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடர்கிறது.

இதனிடையில், 2014-ல் அமித்ஷா தலைவரானது முதலாகவே வருண் காந்திக்கு பாஜகவில் முக்கியத்துவம் குறைந்தது. அவர் புதிதாக அமைத்த கட்சி நிர்வாகத்தில் தேசிய பொதுச்செயலாளர் பதவியை வருண் இழக்க வேண்டியதாயிற்று.

கடந்த அக்டோபர் 2016-ல் இந்திய பாதுகாப்புத்துறை தஸ்தாஜ்வேஜ்களை வெளிநாட்டவருக்கு அளித்ததாக வருண் மீது புகார் எழுந்தது. இதற்காக அவர் அழகிகளுடன் சல்லாபித்ததாகவும் கூறப்பட்ட புகாரையும் வருண் மறுத்திருந்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒடிஸாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது அவரது இளைய சகோதரியான பிரியங்கா வத்ரா, தீவிர அரசியலில் இறங்கும் வகையில் காங்கிரஸின் பொதுச்செயலாளராக அமர்த்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ராகுலிடம் எதிர்பாராத வகையில் ஒடிஸாவின் செய்தியாளர்கள் ஒரு கேள்வி எழுப்பி இருந்தனர். இதை சற்றும் எதிர்பார்க்காத ராகுல் சற்று சமாளித்தவர், ’இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது  எனப் பதிலளித்தார்.

பாஜக தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதால்  அதிருப்திக்கு உள்ளான வருணின் சூழலை சாதகமாக்கி, அவரை காங்கிரஸ் கட்சிக்கு இழுக்க காங்கிரஸின் மூத்த தலைவர்கள் முயன்று வருகின்றனர். இதையடுத்து அவர் காங்கிரசில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிரியங்கா காந்தி அரசியலில் குதித்துள்ள நிலையில் தற்போது வருண் காந்தியும் காங்கிரசில் இணைந்தால் ராகுல் காந்தியின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.