varamuththu Im breathing for 40 years of the year

ஆண்டாளின் தமிழை 40 வருடங்களாக தான் சுவாசித்து வருவதாகவும் வைணவர்களை விட அவரது தமிழை தான் அறிந்துள்ளதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

தமிழை ஆண்டாள் என்ற தலைப்பில் வைரமுத்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து அமைப்பினர், ஸ்ரீவில்லிபுத்தூருக்கே வந்து வைரமுத்து மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை இழிவாக விமர்சித்தார். வைரமுத்துவை கொலை செய்யலாமா வேண்டாமா என மதவெறியை தூண்டும் வகையில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தினார். 

வைரமுத்துவிற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இயக்குநர் பாரதிராஜா, சீமான் போன்றோர் ஆதரவு அளித்தனர்.

இதற்கிடையே ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக வைரமுத்து மீது சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து, ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டியே தான் பேசியதாகவும் தன்மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி வைரமுத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.ரமேஷ், ஆண்டாள் குறித்து வைரமுத்து தனிப்பட்ட கருத்தை கூறவில்லை. ஆய்வுக்கட்டுரையை மேற்கோள் காட்டியே அந்த கருத்தை தெரிவித்துள்ளார். எனவே வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை என தெரிவித்தார்.

இதனிடையே ஆண்டாள் சர்ச்சை குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த வைரமுத்துஆண்டாளின் தமிழை 40 வருடங்களாக தான் சுவாசித்து வருவதாகவும் வைணவர்களை விட அவரது தமிழை தான் அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இனிமையான தமிழுக்காக மட்டுமல்ல, பெண் விடுதலை கருத்துக்களைக் அளித்ததற்காகவும் ஆண்டாளை கொண்டாடுகிறேன். தன் பேச்சு தற்காலச் சூழலுடன் பொருத்தி தவறாக பொருள் கொள்ளப்பட்டுவிட்டது என குறிப்பிட்டார். 

அதை எல்லாரும் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்வதற்காகவும் மீண்டும் என்னைத் தவறாக புரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார்.