அதிமுக ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் அவசரக் கோலத்தில் சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் சீர்மரபினருக்கு மொத்தமாக வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இட ஒதுக்கீட்டில்,வன்னியர் சமூகத்தினருக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்நிலையில் இந்த உள் ஒதுக்கீடு எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்த இட ஒதுக்கீட்டால் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள ஏராளமான சமூகங்கள் பாதிக்கப்படும் எனவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். மேலும், இந்த சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது என தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு, பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் உச்சநீதிமன்றத்தில் வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரணையின் போது தமிழக அரசும், பாமகவும் தொடர்ந்து தங்கள் வாதங்களை முன்வைத்து வந்தன.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்துள்ளனர். அதில், "குறிப்பிட்ட சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், அவ்வாறு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கு தகுந்த காரணங்களை தெரிவிக்க வேண்டியது அவசியம். அதுபோன்ற வலுவான காரணங்கள் தெரிவிக்கப்படாததால் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது செல்லும்" என தங்கள் தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர் உள்ளிட்ட சில சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

எந்த ஒரு பிரிவினருக்கும் உள் ஓதுக்கீடு வழங்கிட மாநில அரசுக்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ள போதிலும், இந்த சிறப்பு ஒதுக்கீட்டிற்கு அடிப்படையான தரவுகள் சரியாக இல்லை என்றும், இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் சரியான ஆதாரங்களின்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், கருணாநிதி கொண்டு வந்த, அருந்ததியினர் மற்றும் இஸ்லாமியருக்கான உள் ஒதுக்கீட்டு முறைகள் அனைத்திற்கும் சரியான ஆதாரங்களின் அடிப்படையில் சட்டங்கள் முறையாக இயற்றப்பட்டதால், அனைத்து நீதிமன்றங்களாலும் அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழகத்தில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில், தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக அவசரக் கோலத்தில் அள்ளித்தெளித்தது போல சரியான அடிப்படைத் தரவுகள் இன்றி இந்த சிறப்பு ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதால்தான் உச்ச நீதிமன்றத்தால் இச்சட்டம் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழக முதல்வர் முதல்வர் அறிவுறுத்தியபடி, மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, இந்த வழக்கு தொடர்பாக அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு முழுமூச்சுடன் மேற்கொண்டும், இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடம் தீவிரமாக கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.