முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை மதிமுக பொதுச் செயலாளரும் திமுக கூட்டணி எம்பியுமான வைகோ திடீரென வெளிப்படையாக பாராட்டியிருப்பது  அந்த கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் விவகாரத்தில் யாரும் எதிர்பாராத வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசை பாராட்டியுள்ளார் வைகோ. கடந்த ஞாயிறன்று சென்னையில் மதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அந்த சமயத்தில் வைகோவிடம் சாத்தான்குளம் இரட்டைக் கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருப்பதாகவும் விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என்று வைகோ பதில் அளித்திருந்தார். ஆனால் தமிழக போலீசார் குறித்து வைகோ எதையும் விமர்சிக்கவில்லை. இந்த விவகாரத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுக, தொடர்ந்து போலீசாரின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறது. ஆனால் கூட்டணியின் முக்கிய கட்சியான மதிமுக பொதுச செயலாளர் போலீசார் குறித்து ஞாயிறன்று வாய் திறக்கவில்லை.

மாறாக விசாரணை சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது என எடப்பாடி பழனிசாமி அரசுக்கு சான்றிதழ் கொடுத்துள்ளார் வைகோ. வழக்கமாக எதிர்கட்சிகளில் இருப்பவர்கள் ஆளும் கட்சியை பாராட்ட வேண்டும் என்றால் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு இறுதியில் இந்த விஷயம் பாராட்டும்படி உள்ளது என்று கூறுவது மரபு. ஆனால் ஞாயிறன்று வைகோ இந்த மரபை கடைபிடிக்காமல் வெளிப்படையாக போலீசாரை பாராட்டும் வகையில் வழக்கு விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

பொதுவாக தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட்டணியின் தலைமையில் இருப்பவர்களின் நிலைப்பாட்டுக்கு விரோதமான எந்த செயலிலும் ஈடுபடுவது இல்லை. மேலும் கூட்டணியின் தலைமை ஒரு விவகாரத்தில் என்ன நிலைப்பாடு எடுக்கிறதோ அதையே தான் கூட்டணியில் உள்ள பிற கட்சிகளும் எடுப்பது வழக்கம். ஆனால் அண்மைக்காலமாக திமுக கூட்டணி தாமரை இலை தண்ணீர் போல உள்ளது போன்றே தெரிகிறது.

அதிமுக கூட்டணியில் இருக்கும் போது அழையா விருந்தாளியாக வந்து ஜெயலலிதாவுக்கு ஆதரவாக எந்த ஒரு விவகாரத்திலும் அறிக்கை பேட்டி கொடுப்பது வைகோ வாடிக்கை. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் போது அது போன்றதொரு பாணியை தற்போது வைகோ கடைபிடிக்கவில்லை. மாறாக கூட்டணியில் இருந்தாலும் ஒவ்வொரு விஷயத்திலும் தங்கள் கட்சிக்கு என்று தனி நிலைப்பாடு என்கிற கொள்கையில் இருக்கிறார். இதனால் தான் திமுகவுடன் ஒட்டியும் ஒட்டாமல் மதிமுக இருப்பது போல்தெரிகிறது. ஆனால் மிக முக்கியமான பிரச்சனையில் அரசை வைகோ பாராட்டியிருப்பது கூட்டணிக்குள் நிச்சயம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும்.

சாத்தான்குளம் விவகாரத்தில் வைகோ அரசுக்கு எதிராக மென்மையான போக்கை கடைபிடிப்பது ஒரு அரசியல் வியூகம் என்கிறார்கள். அதோடு மட்டும் அல்லாமல் வழக்கை சிபிசிஐடி ஏற்ற பிறகு சரியான பாதையில் செல்வதை அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர். அதனை பின்பற்றியே வைகோவும் வரவேற்று இருக்கலாம். எனவே இதில் அரசியல் இல்லை என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.