பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா தனது வாயை அடக்க பழக வேண்டும் என்று மதிமுக பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார். தனக்கு மனநிலை சரியில்லை என்று ஹெச். ராஜா கூறியதற்கு வைகோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில் கதிராமங்கலம் சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோ, ஓ.என்.ஜி.சி. வாகனங்கள் கதிராமங்கலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கூறுவதுபோல், கதிராமங்கலத்தில் போராட்டத்தை நான்தான் தூண்டி விடுகிறேன். என் மீது வழக்கு போட்டால் அதை எதிர்கொள்வேன் என்றும் வைகோ பேசியிருந்தார்.

இந்த நிலையில், வைகோவுக்கு மக்கள் ஆதரவில்லை என்றும், அவரது மனநிலை சமநிலையில் இல்லை என்றும் அவர் வீட்டில் இருப்பது நல்லது என்றும் ஹெச். ராஜா கூறியிருந்தார்.

ஹெச். ராஜாவிற்கு பதிலளிக்கும் வகையில் வைகோ, ஹெச். ராஜா, தனது வாயை அடக்கப் பழக வேண்டும் என்று கூறியுள்ளார். 

கோவில்பட்டியில் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் ஹெச். ராஜா பேச்சு குறித்து கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த வைகோ, ஹெச். ராஜா தனது வாயை அடக்க பழக வேண்டும் என்றார். மேலும், தேர்தலில் போட்டியிடாத கட்சியாக மதிமுக இருந்திருந்தால் ஹெச். ராஜாவின் பேட்டிக்கான விளைவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்றும் வைகோ எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசினார்.