நடிகர் கமல்ஹாசன் உள்பட யாருக்கும் கருத்துச்சொல்ல உரிமை உண்டு என்றும், கருத்துச் சொல்லும் கமல் மீது அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்குவதும்,  எச்சரிக்கை விடுப்பதும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில், நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சி கலாச்சாரத்தை சீரழிப்பதாக கண்டனக்குரல்கள் எழும்பி வருகின்றன.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் பேசிய நடிகர் கமலஹாசன், தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடப்பதாக குற்றம்சாட்டினார்.இதனால் ஆத்திரமடைந்த அதிமுக அமைச்சர்கள் கமலஹாசனை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மேலும் அவரை கைது செய்வோம், வழக்குப் பதிவு செய்வோம் என தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் நடிகர் கமல்ஹாசன் உள்பட யாருக்கும் கருத்துச்சொல்ல உரிமை உண்டு.  கருத்துச் சொல்லும் கமல் மீது அமைச்சர்கள் வார்த்தைகளால் தாக்குவதும்,  எச்சரிக்கை விடுப்பதும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர்  தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு பேராபத்து ஏற்பட்டு வருகிறது என்றும் காவிரி பிரச்னையில் தமிழக அரசை மத்திய அரசு  வஞ்சித்துவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு அமைக்கவில்லை. மத்திய அரசு அனுமதி கொடுக்காமலேயே,  மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது .இது தமிழர்களை ஒடுக்கும் செயல் என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.