திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் நேற்று சற்று பின்னடைவு ஏற்பட்ட நிலையில் இன்று காவேரி மருத்துவமனை வந்த வைகோ, கலைஞர் கருணாநிதி எமனையே வெல்வார் என்றும், அவர் விரைவில் குணமடைவார் என்றும் இது ஒரு மெடிக்கல் மிராக்கிள் என்றும் ஆவேசமாக பேசினார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மாலை சற்று மோசமடைந்தது. இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளி  வந்ததும் தொண்டர்களிடைபே பரபரப்பு தொற்றிக் கொண்டது.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அவர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர்.

இதையடுத்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நம் அனைவரின் அன்புக்குரிய தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் காவேரி மருத்துவமனை அறிக்கையில் கூறியிருப்பது போல் எதிர்பாராத விதமாக ஒரு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டு, டாக்டர்களின் தீவிர சிக்கிச்சைக்கு பிறகு தற்போது தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது எனவே கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்..

இந்நிலையில் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனை வந்தார் மதிமுக பொதுச் செய்லாளர் வைகோ. பின்னர் ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது, கருணாநிதி, எப்பவுமே போராட்ட குணம் கொண்டவர். எமர்ஜென்சி, அடக்குமுறை என அனைத்தையும் பார்த்தவர்தான் கருணாநிதி என்று உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

தற்போது அவர் எமனுடம் போராடிக் கொண்டிருக்கிறார். அந்த எமனையும் வெல்லும் வல்லமை கொண்டவர்தான் கருணாநிதி என்றும், அவர் உடல் சிகிச்சையை ஏற்றுக் கொண்டுள்ளது ஒரு மெடிக்கல் மிராக்கிள் என்று ஆவேசமாக தெரிவித்தார்.