தி.மு.க.வே சரணம்! என்று வைகோ மிக முழுமையாக தன்னை தாய்க்கழகத்துக்கு ஒப்புக் கொடுத்துவிட்டார் என்று பொதுவான விமர்சனம் எழுந்திருக்கிறது. எந்த ஸ்டாலினுக்கு போட்டியாக வந்துவிடுவார்! என்று கருணாநிதியால் சந்தேகித்து வெளியேற்றப்பட்டு, தனிக்கட்சி துவங்கி இத்தனை தோல்விகளை, வருத்தங்களை சந்தித்தாரோ அதே ஸ்டாலினை ‘முதல்வராக்கியே தீருவேன்’ என்று சபதமேற்றிருக்கிறார் வைகோ. 

இந்த முரண்பாடுகளை ஒரு புறம் தூக்கி வைத்துவிட்டு நேற்று ஈரோடு மண்ணில் முப்பெரும் விழாவை நடத்தி, பொதுவாழ்க்கையில் ஐம்பதாவது ஆண்டுகளை தொட்டுவிட்ட வைகோவை கொண்டாடி தீர்த்திருக்கிறது ம.தி.மு.க. 

இந்த விழாவில் கருணாநிதியின் புகழ் மிக அதிகமாக பாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அநியாயத்துக்கு அடக்கி வாசித்துவிட்டார்கள். பெரியார், அண்ணாவுக்கு பின் வைகோவை மட்டுமே பிரதானப்படுத்தி எல்லோரும் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். இதில் தி.மு.க.வினருக்கு  வருத்தம் தான். ஆனால் கிட்டத்தட்ட இந்த நிகழ்வுக்கு போட்டியாக, விழுப்புரத்தில் தி.மு.க. முப்பெரும் விழா நடத்தியதால் வைகோ பெரியளவில் மனம் நொந்தார். 

சூழ்நிலை இப்படியிருக்கையில் ம.தி.மு.க. மேடையில் பேசிய மலேஷியாவின் பினாங்கு மாகாண முதல்வர் ராமசாமி “பெரியார், அண்ணாவுக்கு பிறகு உலக தமிழர்கள் போற்றும் ஒரே தலைவர் வைகோதான். வேறு யாரையும் நான் அந்த இடத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டேன். வேறு யாரையும் என் மனது ஏற்காது, நான் அவர்களை பற்றி மேடையில் பேசவும் மாட்டேன், விமர்சிக்கவும் மாட்டேன்.” தொடர்ந்து மூன்று முறை இதே ரீதியில் பேசியிருக்கிறார். 

கருணாநிதியை திட்டமிட்டே ராமசாமி மறைமுகமாக தாக்கி பேசியிருப்பதாக இதில் தி.மு.க.வினர் டென்ஷனாகி உள்ளனர். தங்கள் தலைவரோடு ராமசாமிக்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை, ஆனாலும் இறந்து போன ஒரு தலைவரை இப்படி மறைமுகமாக  இடித்துப் பேசியது அசிங்கம். அவரை வைகோ கண்டித்திருக்க வேண்டும்! அப்படி செய்யாமல் விட்டது ஏதோ வைகோவே இதை என்கரேஜ் செய்தது போலிருக்கிறது! என்று கொதித்திருக்கின்றனர் தி.மு.க.வினர்.