திமுக தலைவர் அவர்களே, நீங்கள் ஒரு முடிவை எடுங்கள். நான் உங்கள் பக்கத்தில் உறுதுணையாக இருக்கிறேன். கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்தவும் தயார். 

எனது எஞ்சிய காலத்தை திமுகவுடன் இணைந்து செயல்படுவேன் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.


 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திமுகவில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை சமூக ஊடகங்களில் சில திமுகவினர் தெரிவித்தனர். தேர்தல் பிரசாரத்தின்போது இதே கேள்வியை ஊடகங்கள் எழுப்பியபோது, ‘ஊகங்களுக்கு பதில் கூற முடியாது’ என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் கருணாநிதியின் 96-வது பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயாளர் வைகோ கலந்துகொண்டு பேசியதாவது:


தற்போது கோதாவரியில் இருந்து காவிரிக்கு தண்ணீர் வரும் என்று சொல்கிறார்கள். அப்படி வந்தால் நன்றி சொல்வேன். ஆனால், தண்ணீர் வரும் என்று ஏமாற்றுகிறீர்களே. தமிழகத்தை மேகதாது வழியாக அழிக்க நினைக்கிறீர்கள். தமிழகத்தில் 19 மாவட்டங்களில் குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால், ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்து அழிக்க திட்டமிடுகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலியாக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுகிறது. 
எந்த இயக்கத்தில் 30 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டேனோ அந்த இயக்கத்துடன் இணைந்து செயல்பட தற்போது முடிவு எடுத்து விட்டேன். என் எஞ்சிய காலத்தை திமுகவுடன் இணைந்து செயல்படுவேன்.” இவ்வாறு வைகோ பேசினார்.