vaiko pays homage in mgr memorial
தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாட்களில் அவர்களது சிலைகள், மற்றும் நினைவிடங்களுக்கு சென்று அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
ஆனால், கடந்த பிப்ரவரி 7 ம் தேதி, ஓ.பன்னீர்செல்வம், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மவுன விரதம் இருந்து, அஞ்சலி செலுத்தி ஒரே நாளில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் ஹீரோ ஆனார்.

அடுத்த சில நாட்களில், சசிகலா வந்து, சமாதி மேடை மீது ஓங்கி அடித்து சத்தியம் செய்து விட்டு பெங்களூரு சிறைக்கு சென்றார்.

இடையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு பேரவை தொடங்கினார்.

தீபாவின் கணவர் என்ற ஒரே தகுதியை வைத்து, அவரது கணவர் மாதவனும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலிசெலுத்திவிட்டு, தனிக்கட்சி என்று அறிவித்து பின்னர் பல்டி அடித்தார்.
இந்நிலையில், நேற்று வைகோ, தமது கட்சியினருடன் சென்று எம்.ஜி.ஆர் சமாதியில் மலரஞ்சலி செலுத்தி, சில நிமிடங்கள் மவுனம் அனுசரித்தார்.
வைகோ எதற்காக அங்கே சென்றார்? என்று பலருக்கும் சந்தேகம் வந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் மீது கொண்ட பற்று காரணமாக, மதிமுக சார்பில் அவரது நூற்றாண்டு விழாவை நேற்று சென்னையில் கொண்டாடி உள்ளார் அவர்.
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதோடு அல்லாமல், அவர் வாழ்ந்த ராமாவரம் இல்லத்திற்கு சென்று, அங்குள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கும் வைகோ மாலை அணிவித்துள்ளார்.
மாலை, காமராஜர் அரங்கில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தில், பெரியார் நூற்றாண்டு விழாவை எம்.ஜி.ஆர் கொண்டாடிய விதம், இலங்கை தமிழர்களுக்கு அவர் அளித்த நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை எல்லாம் உருக்கமாக பேசி உள்ளார்.
எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுகவால் வாழ்ந்தவர்கள், வளர்ந்தவர்கள், அவர் பெயரை உச்சரித்து பதவி சுகத்தை அனுபவித்தவர்கள் எல்லாம், அவரது நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய காலம் இது.
ஆனால், அவரை மறந்துவிட்டு, கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்றுவதற்காக, அரசியல் சித்து விளையாட்டுக்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகைய சூழலில், எம்.ஜி.ஆரால் துளி கூட பயன் அடையாத வைகோ, அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்திருப்பதை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும்.
இதில் கேலி சித்திரம் வரைவதற்கோ, மீம்ஸ் போடுவதற்கோ துளியும் இடமில்லை என்பதை நெட்டிசன்கள் அறிய வேண்டும்.
