23 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஜூலை 25 அன்று எம்.பி.யாக பதவியேற்க உள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் 1978-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை திமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1993-ம் ஆண்டு மதிமுகவை தொடங்கிய பிறகும், எம்.பி.யாகத் தொடர்ந்தார். 1998, 1999-ம் ஆண்டுகளில் மக்களவைக்கு வைகோ தேர்வு செய்யப்பட்டு 2004-ம் ஆண்டு வரை எம்.பி.யாக செயல்பட்டார். இதன்பிறகு அவர் எம்.பி. ஆகவில்லை. அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை வழங்க திமுக உடன்பாடு செய்திருந்தது.


அதன்படி கடந்த 9 அன்று வைகோ போட்டியின்றி  மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். தேசத்  துரோக வழக்கில் அவர் தண்டனை பெற்றபோதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி  தேர்தலில் நிற்க தடை இல்லாததால், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக ஜூலை 25 அன்று பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே திமுக உறுப்பினர்கள் சண்முகம், வில்சன் ஆகியோரும் பதவியேற்க இருக்கிறார்கள்.


தமிழகத்திலிருந்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டிருந்த 6 பேருடைய பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைவதால், அதற்கு அடுத்த நாள் வைகோ உள்ளிட்ட மூவரும் பதவியேற்க உள்ளார்கள். வைகோ 2025-ம் ஆண்டு வரை இந்தப் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.