ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு வைகோ தகுதியானவரா என்று ஆய்வு செய்யுங்கள். இவரை நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும். திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் தரப்பட்டது. மற்ற இரண்டு இடங்களில் திமுக களம் கண்டுள்ளது. அதேபோல அதிமுகவில் ஒரு இடம் பாமகவுக்கும், மீதி இரண்டு இடங்களில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்தியது.

ஆனால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தேசத் துரோக வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனையும், அதனுடன் ரூ.10000 அபராதமும் விதிக்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் வைகோவின் மனு நிராகரிக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டது. ஆனால் வேட்புமனு பரீசீலனையின் போது வைகோவின் மனு ஏற்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகினர்.

 

இந்தநிலையில், பா.ஜ.க மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, ராஜ்யசபா எம்.பி பதவிக்கு வைகோ தகுதியானவரா என்று ஆய்வு செய்யுங்கள். இவரை நீக்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்திலும் கருது பதிவிட்டு உள்ளார்.

ட்விட்டர் பக்கத்தில் கூறியது, "வி.கோபால்சாமி என்கிற வைகோ ஒரு கிறிஸ்துவர். கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவரின் கருத்துக்களை ஆதரிப்பவர். கிறிஸ்துவ மிஷனரி கொள்கையுடைய வைகோ, ராஜ்ய சபாவுக்குள் நுழைவது இந்தியா கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை சீர்குளைப்பதற்காகவே இருக்கும்" என பதிவிட்டுள்ளார்.