நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் ஜெட் வேகத்தில் இறங்கியுள்ள தி.மு.க கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை ரகசியமாக முடித்து வருகிறது. காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசரை முதன் முதலாக அழைத்து எத்தனை தொகுதிகள் தர முடியும்? எந்தெந்த தொகுதிகள் தர முடியும் என்பதை ஸ்டாலின் விரிவாகவும்,விளக்மாகவும், திட்டவட்டமாகவும் தெரிவித்து அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனையும் அண்ணா அறிவாலயத்திற்கு வரவழைத்து பேசிய ஸ்டாலின் சிதம்பரம் தொகுதிக்கு பதில் விழுப்புரத்தில் போட்டியிடுமாறு கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணனையும் அதனை தொடர்ந்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் அழைத்து பேசிய ஸ்டாலின் அந்த கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி என்று நெற்றிப் பொட்டில் அடித்தது போல் கூறியுள்ளார்.

மேலும் இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் சுதாகர் ரெட்டி, டி.ராஜா ஆகியோரையும் அண்மையில் தனது வீட்டிற்கு அழைத்த ஸ்டாலின் நாகையில் போட்டியிடுமாறு கூறி அனுப்பி வைத்ததாக பேசப்படுகிறது. ஆனால் தற்போது வரை வைகோவுக்கு மட்டும் தி.மு.க தரப்பில் இருந்து அழைப்பு செல்லாமல் இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் வைகோவுக்கு ஈரோடு மற்றும் விருதுநகர் தொகுதிகளை தி.மு.க ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை வைகோவை அழைத்து உறுதிப்படுத்தும் பணி மட்டுமே பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. வைகோ நான்கு தொகுதிகள் எதிர்பார்ப்பதாகவும் தேனியும், காஞ்சிபுரமும் தனக்கு வேண்டும் என்று வைகோ கேட்பதால் அவரை அழைத்து தொகுதிப் பங்கீடை உறுதிப்படுத்துவதில் தி.மு.க தாமதம் செய்வதாக சொல்லப்படுகிறது. இதனால் எந்த நேரத்தில் தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வரும்? இல்லை அழைப்பு என்பது வருமா? என்று வைகோ மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் கலங்கி நிற்பதாக தாயகத்தில் தகவல்கள் றெக்கை கட்டி பறக்கின்றன.