திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதிக்கு மதிமுக பொதுசெயலாளர் வாழ்த்து கூறி இருக்கிறார். 

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இளைஞர் அணி என்ற புதிய அமைப்பை, அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்கள். அந்த அணியைக் கட்டமைக்கும் பணியை, தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏற்றுக்கொண்டு, தமிழகம் முழுமையும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, வலுவுள்ள அமைப்பாக வார்ப்பித்தார்.

கடுமையான உழைப்பாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாலும், தளபதி ஸ்டாலின் அவர்கள் கட்டி எழுப்பிய இளைஞர் அணி, இன்று, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வலிய படைக்கருவிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இலட்சக்கணக்கான இளைஞர்கள் அணிவகுத்து நிற்கின்றார்கள். 

அந்த அணியின் புதிய செயலாளராக, உதயநிதி ஸ்டாலின் அவர்களை நியமித்து, தி.மு.க.தலைவர் தளபதி ஸ்டாலின் இன்று அறிவித்து இருப்பதை, மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கலை உலகில் தமது திறமையை வெளிப்படுத்தி, தமிழக மக்களின் மனங்களில் ஒரு இடத்தைப் பெற்று இருக்கிறார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுமையும் அவர் மேற்கொண்ட பிரச்சார சுற்றுப்பயணம், மக்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகின்ற உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டுவார் என நம்புகிறேன். அவருக்கு  என் பாராட்டுகளையும், நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.