vaiko arrested in chennai

இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்பட மதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வரும் மார்ச் 22ம் தேதி, ஜெனிவாவில் ஐநா சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில், தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்த விசாரணை அறிக்கையை, ஜநா சபையில் ஒப்படைக்க, அந்நாட்டு அரசு 18 மாதம் கூடுதல் அவகாசம் கேட்க திட்டமிட்டுள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

ஏற்கனவே, நடந்து முடிந்த போர் றித்து சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தியதை, இலங்கை அரசு மறுக்கிறது. அதேவேளையில் உள்நாட்டு விசாரணையையும் தாமதம் செய்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை அரசை கண்டித்து மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வைகோ, 'ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின்மாநாட்டில் இலங்கை அரசுக்கு ஆதரவாகவோ அல்லது நடுநிலையாகவோ செயல்படக் கூடாது. இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்கு அளிக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.

பின்னர், நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ தலைமையில் ஏராளமான மதிமுகவினர் ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், வைகோ உள்பட ஏராளமானோரை கைது செய்தனர்.