ஃபைனல் எக்ஸாம் ஃபீவரில் இருக்கிறது பி.ஜே.பி. இன்னும் மூன்று, நான்கு மாதங்கள்தான் எல்லாமும். அதன் பின் அதிகாரத்தில் தொடருமா? தொலையுமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள். அதனால்தான் ஃபீவர் போட்டுப் புரட்டுகிறது பி.ஜே.பி.யை.

அதிலும் தமிழக பி.ஜே.பி.யோ தலைசுற்றலில்தான் இருக்கிறது எப்போதுமே. காரணம்?...கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருந்த காலத்தில் அரசியலில் ஒரு க்ளாரிட்டி இருக்கும். ஒன்று தி.மு.க.வின் கை ஓங்கியிருக்கும் அல்லது அ.தி.மு.க.வின் கை. இதன் மூலம் ஏதோ ஒரு நிலைப்பாட்டுக்குள் வரமுடியும். ஆனால் இப்போதோ என்ன நடக்கிறது, எப்படி போகிறது! என புரியாமல், நொடிக்கு நொடி மாறுகிறது அரசியல் டிரெண்ட்.

 

இந்த சூழலில் பி.ஜே.பி.யை நோக்கி தமிழக கட்சிகளின் கணோட்டங்களோ கன்னாபின்னாவென துளைத்தெடுக்கின்றன. ஆளும் அ.தி.மு.க.வை விட்டுத் தள்ளிவிடலாம். ஆனால் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டுகள் என்று மற்றவர்களோ பிரித்து மேய்கிறார்கள் இந்த இயக்கத்தை. எந்த நொடியிலும் பி.ஜே.பி.யின் ஆளுகை தமிழகத்தில் உருவாகிவிடக்கூடாது எனும் நோக்கில் அவர்கள் பதற்றத்தில் ஏதேதோ செய்வதாக, பேசுவதாக விமர்சித்துக் கொட்டுகிறது பி.ஜே.பி. 

தமிழக அரசாங்கமானது பி.ஜே.பி.யின் பினாமி கட்சியாக செயல்படுவதாக, ஸ்டாலின் விமர்சித்திருப்பதை “இவர்கள் எங்களை கணிக்கும் விதமே சிக்கலாக இருக்கிறது. பி.ஜே.பி.யால் தமிழகத்தில் காலூன்றவே முடியாது என்று தூற்றும் அதேவேளையில் இந்த மாநிலத்தில் ஆட்சியையே நாங்கள்தான் நடத்திக் கொண்டிருக்கிறோம்! என்கிறார் ஸ்டாலின். 

இது எங்கள் மீதான அவரது பயத்தையே காட்டுகிறது. இந்த மாநிலத்தில் நிச்சயம் நாங்கள் காலூன்றிவிடுவோம்! எனும் அச்சத்திலேயேதா அவர் அப்படி பேசுகிறார். அதேநேரத்தில் வைகோவோ எங்களைப் பற்றி வரம்பு மீறிப் பேசுகிறார். கஜா புயலைப் பார்வையிட வராத பிரதமர் மோடியை தமிழ்நாட்டின் விரோதியாக அவர் சித்தரித்து பேசியிருப்பதை எல்லை மீறிய பேச்சாகத்தான்  பார்க்கிறோம்.

மூத்த தலைவரான அவர் இனியாவது சிந்தித்து, எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. தாங்கள் கூட்டணி வைப்பதற்காக அலைபாயும் தி.மு.க.வை திருப்திபடுத்துவதற்காக இப்படி பேசுகிறார் வைகோ. ” என்று விமர்சித்துக் கொட்டியிருக்கிறார் இல.கணேசன்.