மதுரை அப்பலோ மருத்துவமனையிலிருந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் வைகோ மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை சென்றார். அப்போது அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் பிரச்னை ஏற்பட்டதால், உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து மருத்துவர்கள் கூறிய அறிவுரைப்படி ஓய்வெடுக்க மதுரையிலிருந்து வைகோ சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையம் வந்த வைகோவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அங்கிருந்து நேராக சிகிச்சைக்காக போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார். இதனால், மதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 
இது தொடர்பாக மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடல்நிலை சீராக உள்ளது. அவர் இரண்டு வார காலத்துக்கு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே அவருடைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.  வைகோவுக்கு ஓய்வு தேவைப்படுவதால் தொண்டர்கள் யாரும் நேரில் பார்க்க வந்து தொந்தரவு செய்ய வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, “தனக்கு எந்தப் பிரச்னையுல் இல்லை. நான் நன்றாக இருக்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.