கடந்த தி.மு.க. ஆட்சியின் கடைசி பொழுதுகளில் கருணாநிதியை மிக கடுமையாக விமர்சித்துக் கொட்டியவர்கள் இருவர். ஒருவர் தமிழருவி மணியன் மற்றொருவர் பழ.கருப்பையா. இதனால் தங்களது வீடுகள் தாக்கப்பட்டதாக இருவருமே புகார் கிளப்பினர். 

இந்நிலையில் தி.மு.க. ஆட்சி மறைந்து அ.தி.மு.க. அரசேற்ற பின் தமிழருவி மணியன் வைகோவின் தடம் பற்றி நடந்தார், தனிக்கட்சி துவக்கினார், விஜயகாந்துக்கு ஜே போட்டார், வாசனை கொண்டாடினார் பின் என்னென்னவோ ஆகி ரஜினியின் அரசியல் குருவாக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டு, அவர் கசி துவங்கும் நாள் நோக்கி காத்திருக்கிறார். 

ஆனால் பழ. கருப்பையாவோ, கருணாநிதியை விமர்சித்துவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்து அதே சூட்டோடு சீட் பெற்று எம்.எல்.ஏ.வானார். சில நாட்கள்தான் ஜெயலலிதாவோடு பயணிக்க முடிந்தது அவரால். அதன் பின் ஜெ.,வோடு முரண்பட்டு கட்சிக்குள்ளேயே அதிருப்தி எம்.எல்.ஏ.வானார். பின், ஆட்சி இறுதியில் அ.தி.மு.க.வினரால் தன் வீடு தாக்கப்பட்டதாக கருணாநிதியிடம் புகார் கூறி தி.மு.க.வில் இணைந்தார் இப்போது அக்கட்சியின் முக்கிய பேச்சாளராக இருக்கிறார். 

இந்நிலையில், சமீபத்தில் வெளியான சர்கார் படம் சீன் பை சீன் அ.தி.மு.க.வையும், அதன் ஆட்சியையும் தோலுரித்து தொங்கவிட்டுள்ளது தெரியும். அதில் முதல்வர் வேடத்தில் நடித்துள்ள பழ.கருப்பையா, அ.தி.மு.க.வை வெளுத்தெடுக்கும் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளார். அத்தோடு நில்லாமல், சாட்டிலைட் சேனல் பேட்டிகளில் கலந்து கொண்டு தன் நடிப்பை நியாயப்படுத்த வேறு செய்திருக்கிறார் கருப்பையா. அதிலும் குறிப்பாக ‘அ.தி.மு.க.வினருக்கு அறம் இல்லை’ என்று அவர்  கூறியிருப்பதும், ஜெயலலிதா பற்றி அவர் வைத்திருக்கும் விமர்சனங்களும் ஆளுங்கட்சிக்குள் பூகம்பத்தைக் கிளப்பியுள்ளன. 

இதற்கு கடுமையான எதிர்விளைவுகள் உருவாகி வருகின்றன. மாஜி அமைச்சர் வைகை செல்வன், “பல கட்சிகளுக்கு தாவிய கருப்பையா, கடைசியில் ஏற்கனவே தாவியிருந்த கட்சிக்கே மீண்டும் தாவி புதிய சாதனை படைத்தவர். ஜஸ்ட் கவுன்சிலராகவாவது ஆக வேண்டும் எனும் ஆசையில் அம்மாவிடம் தவம் கிடந்தவரை, எம்.எல்.ஏ.வாக்கினார் எங்கள் அம்மா. ஆனால் அந்த விசுவாசதை மறந்து, நன்றி கெட்டுப்போய் தி.மு.க.வின் குடும்ப குழுமம் தயாரித்த படத்தில் கூலிக்காக அம்மாவின் ஆட்சியை அசிங்கப்படுத்தியிருக்கிறார். 

கருணாநிதி என்ன கடவுளா? என்று கேட்ட பழ.கருப்பையாவின் பழைய வாய் இப்போது அவரை ‘தலைவா’ என்று கொண்டாடுகிறது. அப்படியானால் புரிந்து கொள்ளுங்கள் கருப்பையாவின் அறத்தை!” என்று பொளந்திருக்கிறார். இதுக்கு சர்கார் முதல்வர் ‘மாசிலாமணி’யின் பதில் என்னவாக இருக்கும்?...