vaigai selvam planning to make new team
எடப்பாடி அணியில் எத்தனை எம்.எல்.ஏ க்கள் இருக்கிறார்கள் என்று கேட்பதைவிட, எத்தனை அணிகளாக இருக்கிறார்கள் என்று கேட்கும் அளவுக்கு நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது நிலைமை.
ஏற்கனவே 30 க்கும் மேற்பட்ட தலித் எம்.எல்.ஏ க்கள் ஓர் அணியில் திரண்டு, அமைச்சரவையில் முக்கியத்துவம் கோரி, முதல்வருக்கு நெருக்கடி கொடுத்தனர்.
அடுத்து, முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம் தலைமையிலான ஒரு அணி, ஏற்கனவே முதல்வர் எடப்பாடியை சந்தித்து, ஒருவாரம் அவகாசம் கொடுத்திருக்கிறது.

ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவை எடுக்காவிட்டால், நாங்களும் உங்களுக்கு எதிராக செயல்படவேண்டி வரும் என்று சைலண்டாக அவர்கள் மிரட்டி சென்றுள்ளனர்.
இதை அடுத்து, வைகைச்செல்வன் தலைமையில், அடுத்து ஒரு அணி எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வருகிறது. 6 எம்.எல்.ஏ க்களை தமக்கு ஆதரவாக திரட்டி அவரும் ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி இருக்கிறார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட வைகை செல்வன் தோல்வி அடைந்தார். அந்த மாவட்ட அமைச்சரான, ராஜேந்திர பாலாஜி, தமது ஆதரவாளர்களை பயன்படுத்தி செய்த உள்குத்து வேலைகள் காரணமாகவே அவர் தோற்றார் என்று கூறப்படுகிறது.
இதனால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், வைகைச்செல்வனுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது. இருவரும் எடப்பாடி அணியில் இருந்தாலும். ராஜேந்திர பாலாஜிக்கே, முதல்வர் எடப்பாடி முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

இதனால், 6 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அடுத்த அணியை தொடங்கி ஆலோசனை நடத்தி வருகிறார் வைகைச்செல்வன். அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் முதல்வருக்கு எதிராக, இந்த 6 எம்.எல்.ஏ க்கள் அணி செயல்பட தயாராக இருக்கிறது.
இவ்வாறு அணி, அணியாக பிரிந்து செயல்படும் எம்.எல்.ஏ க்களால், அடுத்தடுத்து நெருக்கடிக்கு ஆளாகி வருகிறார் முதல்வர் எடப்பாடி. இதன் காரணமாக, அவரது ஆட்சிக்கு நெருக்கடி முற்றி வருகிறது.
