இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார். 
 
நாடு முழுவதும் 3000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய பிரதமர் மோடி சரியான நேரத்தில் நமக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்திருக்கிறது. நாட்டு மக்களின் நலனுக்கு உழைக்கும் முன்களப் பணியாளர்களுக்கே முதலில் தடுப்பூசி செலுத்தப்படும்.  குறைந்த காலத்தில் ஒரு தடுப்பூசி அல்ல, இரண்டு இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளை உருவாக்கப்பட்டுள்ளன. கொரோனா, தடுப்பூசியை கண்டுபிடிக்க பாடுபட்ட விஞ்ஞானிகள், மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். 

இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகள் வெளிநாடுகளில் தயாராகும் தடுப்பூசிக்கு எந்த வகையிலும் தரம் குறைந்தவை அல்ல. இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை, வதந்திகளை நம்பவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.  மனித குலம் ஒன்றை நினைத்துவிட்டால் அதனை சாதிப்பது இயலாத காரியம் அல்ல. முதல், இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான செலவுகளை மத்திய அரசே ஏற்கும். முதல் கட்டமாக 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 மாதங்களில் இந்தியாவில் 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும். இந்தியாவின் மருத்துவ கட்டமைப்பை உலகமே தற்போது வியந்து பாராட்டுகிறது. இந்திய விஞ்ஞானிகளையும் இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகளையும் உலகமே நம்புகிறது. உலகிலேயே இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் தான் மிகவும் விலை குறைவானது. இந்தியாவின் திறமை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசிகள் நமது கால சூழல் உள்ளிட்ட அனைத்திற்கும் ஏற்றது என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.