UP Election Results 2022 : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக 141, சமாஜ்வாதி கூட்டணி 91 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் 5, காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தின் தேர்தல் முடிவை தான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் எந்த ஒரு கட்சியும் 2-வது முறையாக ஆட்சி அமைத்ததாக கடந்த 37 ஆண்டுகளில் வரலாறு இல்லை.

2012-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி 224, பகுஜன் சமாஜ் கட்சி 80, பா.ஜ.க. 47, காங்கிரஸ் 28 இடங்களில் வெற்றி பெற்று இருந்தன. 2017-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. 312, சமாஜ்வாடி 47, பகுஜன் சமாஜ் 19, காங்கிரஸ் 7 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
பாரதிய ஜனதா கட்சி இந்த மாநிலத்தில் தொடர்ந்து செல்வாக்குடன் இருப்பது கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போதும் உறுதிப்படுத்தப்பட்டது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுமார் 40 சதவீத வாக்குகளை பா.ஜ.க. பெற்று இருந்தது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அந்த வாக்கு சதவீதம் 50 சதவீதமாக உயர்ந்தது.
இந்துத்துவா கொள்கைகளை முன்நிறுத்துவதால் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பா.ஜ.க.வுக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது. பொதுவாக உத்தரபிரதேச தேர்தல் வரலாற்றை ஆய்வு செய்தால் தேர்தல் அறிவிப்புகளும், ஜாதி வாக்குகளும், கூட்டணியும் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதாக இருக்கும்.

இவை அனைத்திலும் பாரதிய ஜனதாவுக்கு சாதகமான நிலையே உள்ளது. நடுத்தர, ஏழை மக்களுக்கு நிறைய இலவச திட்டங்களை பாரதிய ஜனதா அறிவித்து தன் வசப்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக 141, சமாஜ்வாதி கூட்டணி 91 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. பகுஜன் சமாஜ் 5, காங்கிரஸ் 3 இடங்களில் முன்னிலையில் இருக்கின்றன.
