Asianet News TamilAsianet News Tamil

அரசாங்க பணம் முதன் முறையா மக்களிடம் நெருங்கி வருது... ஏழைகளை காப்பாற்ற ’சூபர் ரிச்’ வரி போடுங்க..!

நெருக்கடியான கட்டத்தில், சிறப்பாகச் செயல் புரிவதில்தான் ஆட்சித் திறமை அடங்கி இருக்கிறது.

Use the super rich line to save the poor
Author
India, First Published Mar 26, 2020, 6:37 PM IST

உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு, எல்லா அரசுகளையும் கடுமையான  சோதனைக்கு உள்ளாக்கி இருக்கிறது. 

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, சில உண்மைகளை ஒப்புக் கொண்டேயாக வேண்டும். அடுத்தடுத்து ஏதேனும் ஒரு பிரசினை எழுந்த வண்ணம் உள்ளதால், கடந்த சில ஆண்டுகளாக, உலகப் பொருளாதாரம், மூச்சுத் திணறி வருகிறது. இதற்கு, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் காரணம் இல்லைதான். ஆனால், அவர்கள்தாம் பொறுப்பு ஏற்றாக வேண்டும்.Use the super rich line to save the poor

சாதனைகளுக்குத் தாமும், வேதனைகளுக்குப் பிறரும் என்கிற வாதம் ஏற்புடையது அன்று. நெருக்கடியான கட்டத்தில், சிறப்பாகச் செயல் புரிவதில்தான் ஆட்சித் திறமை அடங்கி இருக்கிறது. பெருந்தலைவர் காமராசர், ஒன்பது ஆண்டுகள் முதல்வராய் இருந்தார். அப்போது தமிழ்நாட்டின், இந்தியாவின் பொருளாதாரம், மிக மோசமான நிலையில் இருந்தது.

 மக்கள் அத்தனை பேரும், 'ரேஷன்' பொருட்களை மட்டுமே நம்பி வாழ வேண்டிய நிலை. கல்வியறிவு, தொழில் நுட்ப அறிவு, புதிய தொழில்களுக்கான முதலீடு, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் எதுவும் இல்லை. உண்மையிலேயே, 'வெறும் கையால் முழம் போடுகிற நிலைதான். அதில் இருந்துதான் இன்றைய தமிழ்நாட்டை உருவாக்கிக் காட்டினார் காமராசர். எப்படி சாத்தியம் ஆயிற்று..? என்ன சூட்சுமம் (அ) சூத்திரம் கையாண்டார்..?

 Use the super rich line to save the poor

அரசுக்கும் மக்களுக்கும் இடையே பிணைப்பை, பாலத்தை ஏற்படுத்தினார். பொது நலன் அன்றி, அரசியல் லாப நட்டக் கணக்கு, உள்ளே நுழையாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார். தான்பணியாற்றிய ஒவ்வொரு நொடியும், தான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும், மக்களுக்குப் பயன் உள்ளதாய் அமைய வேண்டும் என்று மட்டுமே கருதிச் செயல் பட்டார். தேர்தலில், தான் தோற்றார்; ஆனால், தமிழ்நாடு பொருளாதாரத்தில் நிமிர்ந்தது. 

எந்த ஒரு நாடும் நெருக்கடியான கட்டங்களில் இருந்து வெளியில் வருவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. 'தனிமைப் படுத்துதல்' மட்டுமே தீர்வு என்று கொரானாவுக்கு சொல்கிறோமே... அதேபோல், மக்கள் - அரசாங்கம் பிணைப்புதான், நெருக்கடியைத் தீர்க்கும். இந்தப் பிணைப்பு தற்போது எப்படி இருக்கிறது..? Use the super rich line to save the poor

மத்திய அரசு முன் வைக்கிற நடவடிக்கைகள், அறிவிக்கிற திட்டங்கள் - அரசிடம் இருந்து மக்களை அந்நியப் படுத்துகிற வகையிலேயே அமைந்து வருகின்றன. ஆட்சியாளர்களின் நோக்கம் உன்னதமாகக்கூட இருக்கலாம். ஆனால், ஒரு ஜனநாயகக் குடியரசில், மக்களின் ஏற்பு, அவர்களின் ஆதரவுதான், எல்லாவற்றிலும் முக்கியம் ஆனது. 'இது நல்லது' என்று அரசு சொல்வது வேறு; 'இது நல்லது' என்று மக்களே உணர்வது வேறு. 

இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் ஒழிய, அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. என்றால், அரசு என்ன செய்ய வேண்டும்..? பலன்கள் மேலிருந்து கீழும், பாதிப்புகள் கீழ் இருந்து மேலும் செல்வதாகத்தான் நமது பொருளாதாரம் இருந்து வருகிறது. குறிப்பாக, அரசு அறிவிக்கிற திட்டங்கள், முதலில் மேலடுக்கு பிரமுகர்களுக்கு நன்மை செய்து, சிறிது சிறிதாகக் கீழ் நோக்கி மெல்ல நகர்கிறது. அதே சமயம், ஏதேனும் ஒரு பிரசினை (அ) நெருக்கடி வருகிற போது, அடித்தட்டு மக்கள் உடனடியாக பாதிக்கப்படுகிறார்கள். 'மேலே' செல்வதே இல்லை. இதனைச் சரிசெய்ய வேண்டாமா..? 

எம்.ஜி.ஆர். பெற்ற வெற்றிகளைப் பற்றிக் கேட்கிற போது பலரும் சொல்கிற பொதுவான கருத்து - 'சாமான்ய மக்கள் இன்னலுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொண்டார்..' இதுதான் மத்திய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம். 'கொரோனா' சமயத்தில் இது வெகு அவசியம். இரு தினங்களுக்கு முன்னர் மத்திய நிதி அமைச்சர், வருமான வரி, ஏடிஎம் கணக்கு பற்றி சில அறிவிப்புகளை வெளியிட்டார். மிகுந்த ஏமாற்றம், எரிச்சலைத் தருவதாய் இருந்தன. கடுமையாக விமர்சித்தோம். பல முனைகளில் இருந்தும், கண்டனங்கள் வந்தன.Use the super rich line to save the poor

 ஆனால், இன்றைய அறிவிப்பு, உண்மையில் வரவேற்கத் தக்கதாய் உள்ளது. ரூ. 1.70 லட்சம் கோடி அளவுக்கு உதவிகள் வழங்கப்பட உள்ளன. பாராட்டுகள். விவசாயிகளுக்கு ரூ 2000; நூறு நாள் வேலைக்கான ஊதியம் 180இல் இருந்து 202ஆக உயர்வு; குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், 3 மாதங்களுக்கு, 5 கிலோ அரிசி/ கோதுமை இலவசம், ஜன் தன் யோஜனா' கணக்கு உள்ள மகளிருக்கு, 3 மாதங்களுக்கு, மாதம் ரூ 500 உதவித் தொகை, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்துக்கு 3 மாதங்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்.
 
மாத வருமானம் 15000க்கு உட்பட்ட தொழிலாளருக்கு, 3 மாதங்களுக்கு, வைப்பு நிதிப் பங்களிப்பு. எல்லாவற்றையும் விட ஆரோக்கியமானது - மகளி சுய உதவிக் குழு பெறும் பிணையில்லாக் கடன் தொகை, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்வு. மத்திய நிதி அமைச்சர் அறிவித்து உள்ள நிவாரணத் திட்டங்கள் உண்மையிலேயே நிவாரணம் தருவதாக உள்ளன. அத்துடன், இவற்றைப் பெறுவதற்கு எந்தவிதக் கூடுதல் வழிமுறை, நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. எல்லாரும் எளிதில் பலன் பெறுகிற வகையில் அமைந்துள்ளன. மிக நல்லது. குறைகள் இல்லாமல் இல்லை. ஆனாலும், தற்போதைய கடினமான பொருளாதாரச் சூழலில், மத்திய அரசு இவ்வளவுதான் செய்ய முடியும் என்று தோன்றுகிறது.

 Use the super rich line to save the poor

சில ஆலோசனைகள்: செல்வந்தர், உயர் வருவாய் கொண்டோர், மிக உயரிய பதவியில் இருப்போருக்கு 'சூபர் ரிச்' வரி விதிக்கலாம். போதைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். இதற்கு இணையாக, அத்தியாவசியப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியை, நீக்கலாம்; குறைக்கலாம். 

இப்படிப் பல யோசனைகள், பலரிடம் இருந்து வரலாம். சீர் தூக்கிப் பார்த்து, தக்க நேரத்தில் தக்கது செய்தால் நல்லது. ஒன்றே ஒன்றுதான். மக்களை நோக்கி அரசு ஓரடி நகர்ந்தால், அரசுக்கு ஆதரவாய் மக்கள் ஈரடி வருவார்கள். இந்திய ஜனநாயகத்தின் இயல்பு இது. அறிந்து நடந்து கொள்கிறவர்கள் - மக்கள் தலைவர்களாய், பெருந்தலைவர்கள் ஆகிறார்கள். சரிதானே..? 

Use the super rich line to save the poor

- எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios