குருவிக்கார சமூதாய மக்களை எஸ்.டி பட்டியலில் இணைக்க ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவரது தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: 

இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டிணம், இராமநாதபுரம், திருப்புல்லாணி, இராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் பிற பகுதிகளில் வாழும் 458 குருவிக்கார குடும்பத்தைச் சேர்ந்த 2080 நபர்கள் தாங்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாமல் அனாதையாக வாழ்ந்துவருகின்றார்கள். இவர்களின் குழந்தைகள் இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியாததால் பள்ளிப் படிப்பை கூட எட்டி பிடிக்க முடியாத நிலையில் உள்ளனர். 

மாண்புமிகு புரட்சித் தலைவி டாக்டர் அம்மா அவர்கள் கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசிடம் போராடி குருவிக்காரர், நரிக்குறவர், மலையாளக் கவுண்டர் ஆகியோரை ST பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதன் பேரில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் இதுவரை இவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் இவர்கள் அனைவரும் அரசின் உதவி மற்றும் ஏனைய சலுகைகளை பெறமுடியாமல் மிகுந்த துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். 

இராமநாதபுரத்தில் வாழும் குருவிக்கார சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் மாண்புமிகு அ.அன்வர்ராஜா, Ex MP அவர்களிடம் முறையிட்டதின்பேரில், அவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களை சந்தித்து மேற்கண்ட 3 சமுதாயத்தினரையும் பழங்குடியினர்  (ST) பட்டியலில் சேர்த்திட வலியுறுத்தினார். மாண்புமிகு முதல்வர் அவர்கள் பரிசீலிப்பதாக கனிவுடன் கூறினார். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.