அரியானாவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் குடும்ப அரசியல் வேண்டாம் எனக்கூறி தனது மத்திய அமைச்சர் பதவியை சவுத்ரி பிரேந்தர் சிங் தூக்கி எறிந்துள்ளார். 

மத்திய உருக்குத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் பிரேந்தர் சிங். அரியானாவை சேர்ந்த முன்னணி காங்கிரஸ் தலைவரான இவர், கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க. ஐக்கியமானார். அவருக்கு மத்திய அமைச்சரவையில் ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் துறை ஒதுக்கப்பட்டது. பின்னர் இவர் 2016-ம் ஆண்டு அரியானாவில் இருந்து பா.ஜ.க. சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, இவருக்கு உருக்குத்துறை ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பிரேந்தர் சிங்கின் மகனான பிரிஜேந்திர சிங்குக்கு அரியானாவின் ஹிசார் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு வழங்கியுள்ளது. இது பிரேந்தர் சிங்குக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் ஒரே குடும்பத்தில் தனக்கும், தனது மகனுக்கும் பதவி கிடைப்பதன் மூலம் வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் விதமாக மாறிவிடும். ஆகையால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரேந்தர் சிங் அதிரடியாக அறிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேந்தர் சிங், “மக்களவை தேர்தலில் எனது மகன் பிரிஜேந்திர சிங்குக்கு, ஹிசார் தொகுதியில் போட்டியிட பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கியுள்ளது. குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவன் நான். எனவே எனது மத்திய அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்கிறேன். இது குறித்து பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு தகவல் தெரிவித்துள்ளேன்’ என்றார்.