தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என்.எஸ்.எஸ்.ஓ.), 1993-94 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தியபோது 21.9 கோடி ஆண்கள் பணியில் இருந்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 2011-12-இல் அது 30.4 கோடி அளவிற்கும் உயர்ந்துள்ளது.ஆனால், அதே தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் 2017-2018-இல் எடுத்த சர்வேயில் நாட்டில் 28.6 கோடி ஆண்கள் மட்டுமே வேலை செய்வதாக தெரியவந்துள்ளது. 

அதாவது 1.8 கோடி ஆண்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர்.அதிலும், கடந்த 5 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2017-18ஆம் ஆண்டில்தான் நிலைமை படுமோசம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மிக அதிகமானோர் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர்.

வேலைபார்க்கும் ஆண் தொழிலாளர்களின் விகிதம் குறைந்தது நாட்டில் இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.1993-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017ஆம் ஆண்டில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இருபகுதிகளிலும் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. 2011-12ஆம் ஆண்டில் வேலையில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையில் நகர்ப்புறங்களில் 8.9 கோடி என்றும், கிராமப்புறங்களில் 21.4 கோடி என்றும் இருந்தனர்.

ஆனால் 2017-18ஆம் ஆண்டில் நகர்ப்புறங்களில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 8.4 கோடியாகவும், கிராமப்புறங்களில் வேலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை 20.1 கோடியாகவும் குறைந்திருக்கிறது.

வேலைவாய்ப்பு சரிவு கிராமப்புறங்களில் 6.4 சதவிகிதமாகவும், நகர்ப்புறங்களில் 4.7 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.2011-12ஆம் ஆண்டிலிருந்து 2017-18 வரையிலான காலகட்டத்தில் ஆண் - பெண் என மொத்தமாகக் கிராமப்புறங்களில் 4.3 கோடி பேரும், நகர்ப்புறங்களில் 40 லட்சம் பேரும் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். 

மொத்தமாக கடந்த 5 ஆண்டுகளில் 4 கோடியே 70 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.. வேலை இழப்பு பிரச்சனையில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்தான் என்றும், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பின்னரே வேலையிழப்பு அபாயம் அதிகரித்துள்ளது என்றும் கூறும் இந்த ஆய்வுகள், மாதச் சம்பளம் வாங்குபவர்கள் மட்டும் 37 லட்சம் பேர் தங்களின் வேலைகளை இழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மாறாக, ஏற்கெனவே இருந்த 5 கோடி பேரின் வேலைவாய்ப்பைப் பறித்திருப்பது, தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகி இருக்கிறது.