உளுந்தூர்பேட்டை இளம்பெண் சரஸ்வதியை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகள் எவரும் எந்த வழியிலும் தப்பிவிடாதவாறு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

உளுந்தூர்பேட்டை அருகே தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செவிலியர் பட்டயப்படிப்பு படித்து வந்தார். அவரும், அதே ஊரைச் சேர்ந்த ரங்கசாமி என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி வீட்டின் பின்புறம் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்து கிடந்தார். இந்த கொலைக்கு ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, குற்றவாளிகள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த கொலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;-  உளுந்தூர்பேட்டை தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் வீரமணியின் மகள் சரஸ்வதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் எவரும் எந்த வழியிலும் தப்பிவிடாதவாறு கடுமையான நடவடிக்கையைக் காவல்துறை எடுக்க வேண்டும். 

பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்டவரின் சகோதரியின் படிப்புச் செலவை மாவட்டக் கழகம் ஏற்கும் எனவும் சொல்லி இருக்கிறோம். வழக்கை நேர்மையாகவும் உறுதியாகவும் காவல்துறை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.