மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் படத்துக்கு திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார்.

பாமகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு, கடந்த 2018ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அதன்பிறகு பாமக தலைமை மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கிய குரு மகன் கனலரசன், மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் உதயநிதி ஸ்டாலினை சந்தித்த கனலரசன் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆதரவு என அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். 

இந்நிலையில், கடலூர் பிரச்சாரத்தை முடித்த உதயநிதி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள காடுவெட்டி கிராமத்துக்கு நேற்று வந்த உதயநிதி ஸ்டாலின், மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் இல்லத்துக்குச் சென்று அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், குருவின் தாயார் கல்யாணியிடம் ஆசி பெற்றார். குருவின் மகன் கனலரசனையும் சந்தித்துப் பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர். 

இந்நிலையில், காடுவெட்டியாரின் குடும்பத்தின் மீதான திமுகவின் இணக்கமான போக்கு, பாமகவிடம் இருந்து வன்னியர் வாக்குகளைக் கணிசமாகப் பிரித்து விடுமோ என அக்கட்சியினர் அஞ்சுகின்றனர்.