குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இந்து, சீக்கியர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த குடியுரிமை திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், மிசோரம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்த போராட்டத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் திமுக சார்பில் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது திமுகவினர் மத்திய அரசை கண்டித்து கண்டன குரல்களை எழுப்பினர். குடியுரிமை திருத்த மசோதா நகலை கிழித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து, போலீசார் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளையும் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.