தி.மு.க தலைவராக   தேர்வு செய்யப்பட்ட தினத்தில் மு.க.ஸ்டாலினின் நிழல் போல் அவரது மகன் உதயநிதி உடன் இருந்த நிகழ்வு அக்கட்சியின் அடுத்த வாரிசு யார் என்பதை கட்டியம் கூறும் வகையில் இருந்தது. தி.மு.க பொதுக்குழுவிற்கு காலை எட்டு நாற்பது மணி அளவில் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து புறப்பட்டார். அப்போது அவருடன் காரில் இருந்த ஒரே ஒரு நபர் அவரது மகன் உதயநிதி மட்டுமே. கார் நேராக தியாகராயநகரில் உள்ள அவரது நண்பர் அன்பில் பொய்யா மொழி வீட்டிற்கு. ஸ்டாலின் நேராக அண்ணா அறிவாலயம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 ஆனால் ஸ்டாலினோ நேராக தனது நண்பர் வீட்டிற்கு சென்றார். இன்று அன்பில் பெய்யா மொழியின் நினைவு நாள் என்பதால் அங்கு அவரது படத்திற்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அப்போது அங்கு ஸ்டாலினிடம் அவரது மகன் உதயநிதியும் அன்பில் பொய்யாமொழி படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் நேராக கோபாலபுரம் இல்லத்திற்கு ஸ்டாலின் சென்றார். அங்கு கலைஞர் புகைப்படத்திற்கு ஸ்டாலின் மரியாதை செலுத்திய போதும் உதயநிதி உடன் இருந்தார். பின்னர் ஸ்டாலின் வாகனம் பொதுக்குழு நடைபெற்ற அண்ணா அறிவாலயத்திற்குள் சென்றது. அங்கு தந்தை ஸ்டாலினுடன் நடந்து சென்ற உதயநிதி நேராக மேடையில் ஏறி அங்கிருந்த அண்ணா மற்றும் கலைஞர் புகைப்படங்களுக்கு அருகே நின்று கொண்டார். நிகழ்வை நேரலையாக ஒளிபரப்பு செய்த கலைஞர் தொலைக்காட்சி அவ்வப்போது மேடையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த உதயநிதியை காட்டிக் கொண்டே இருந்தது. 

ஸ்டாலின் தலைவராக அறிவிக்கப்பட்டு வாழ்த்துரை, ஏற்புரை முடியும் வரை உதயநிதி மேடையில் இருந்து இறங்கவே இல்லை. பொதுக்குழு முடிந்து ஸ்டாலின் மேடையில் இருந்து கீழே இறங்கும் போது மீண்டும் அவருடன் உதயநிதி சேர்ந்து கொண்டார். தொடர்ந்து அண்ணா நினைவிடம், கலைஞர் நினைவிடம் மற்றும் பெரியார் திடலில் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய போதும் உதயநிதி மிக அருகாமையில் நின்று தனது தந்தைக்கு உதவி செய்து கொண்டிருந்தார். பெரியார் திடலில் பெரியார் சமாதியில் ஸ்டாலின் மரியாதை செய்துவிட்டு நிற்க அருகில் உதயநிதி நிற்பதை கவனித்த கி.வீரமணி அவரிடம் சிறிது மலர்களை கொடுத்து அஞ்சலி செலுத்துமாறு கூறினார். ஆனால் உதயநிதியோ வேண்டாம் என்று கூறி ஒதுங்க, வலுக்கட்டாயமாக அவரை அழைத்து மரியாதை செலுத்த வைத்தார் வீரமணி. இதன் பின்னர் ஸ்டாலின் வீட்டிற்கு நேராக செல்ல, அங்கு அவரை சந்தித்து பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போதும் ஸ்டாலின் உடன் இருந்தவர் உதயநிதி. மாலையில் அண்ணா அறிவாலயத்திற்கு ஸ்டாலின் சென்ற போதும் அவருடன் உதயநிதியை பார்க்க முடிந்தது. இதுநாள் வரை கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உதயநிதி தனது தந்தைக்கு அருகே செல்லவே மாட்டார். தந்தை மேடையில் இருந்தால் உதயநிதி கீழே நான்காவது அல்லது ஐந்தாவது வரிசையில் அமர்ந்திருப்பார்.

ஆனால் கலைஞர் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற இரங்கல் கூட்டங்களில் உதயநிதியை முதல் வரிசையில் பார்க்க முடிந்தது. தற்போது ஸ்டாலின் தனது வாழ்வின் முக்கியமான நிகழ்வில் தனது மகன் உதயநிதியை அருகேயே வைத்துக் கொண்டது அடுத்த வாரிசு அவர் தான் என்பதை தொண்டர்களுக்கு மட்டும் அல்லாமல் நிர்வாகிகளுக்கும் எடுத்துரைப்பதாகவும் இருந்தது.